“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மிரட்டல்களுக்கு ஒருபோதும் நான் ஒருபோதும் அடிபணியமாட்டேன். புதிய கட்சியை ஆரம்பித்தே தீருவேன்.” இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சூளுரைத்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவுக்கு நேர்ந்த கதியே தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் நடக்கப் போகின்றது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமரர் ரணிசிங்க பிரேமதாஸ கட்சிக்குள் இருந்த முக்கிய தலைவர்களை அச்சுறுத்தி ஓரம்கட்டிவிட்டு தனது அரசியல் பயணத்தை தொடர முற்பட்டதாலேயே அவர் எவரது ஆதரவும் இன்றி இறுதியில் உயிரிழக்கவும் நேரிட்டது என்று தெரிவித்துள்ள மஹிந்த, அந்த நிலை தற்போது மைத்திரிபாலவுக்கும் ஏற்பட்டு வருகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொது எதிரணியினர் புதிய கட்சியைத் தொடங்கினால் வீதியில் இறங்க முடியாத நிலையை உருவாக்குவேன் என கடந்த வெள்ளிக்கிழமை மாத்தறையில் நடைபெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால எச்சரித்த நிலையிலேயே மஹிந்த இவ்வாறு பதிலளித்திருக்கின்றார். அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய பரிசோதனை உற்பத்தி உதவி அதிகாரிகளின் சங்கத்தின் 19 ஆவது சம்மேளனம் நேற்று திங்கட்கிழமை பத்தரமுல்லையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதீதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய மஹிந்த ராஜபக்ஷ, புதிய கட்சி ஆரம்பித்தால் இரகசியங்களை வெளியிடுவேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாத்தறையில் வைத்து எச்சரிக்கை விடுத்திருந்தமை தொடர்பாக தனது பதிலை தெரிவித்துள்ளார். இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்தால் இல்லாத விடயங்களும் உதயமாகும் என்றும் குறிப்பிட்டுள்ள அவர், அதனைத்தடுக்க எவராலும் முடியாது எனவும் சூளுரைத்துள்ளார். “அரசியல் கட்சி ஒன்றை உருவாக்குவதற்கான உரிமை. எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அமைப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்தபோது இவ்வாறு அச்சுறுத்தியிருந்தால் என்னவாகியிருக்கும்? டி.எஸ். கூறியிருந்தால் எப்படியிருந்திருக்கும்? கட்சி உருவாகியிருந்திருக்குமா? அப்படி கட்சி உருவாகும். அதனை எவராலும் தடுத்துநிறுத்த முடியாது.
நான் அப்படி கட்சி ஒன்றை ஆரம்பிக்கமாட்டேன். அதன் அர்த்தம் என்னவென்றால் அப்படியான சுதந்திரமொன்று காணப்பட வேண்டும். தீர்மானம் எடுப்பதற்கான சுதந்திரம் மக்களுக்கு இருக்கவேண்டும். அச்சுறுத்தினால் அதனை எவ்வாறு செய்வது? நன்றாக கூறியிருந்தால் அதில் வித்தியாசம் இல்லை. ஆனால் அச்சுறுத்தல் விடுத்தால் இல்லாததொன்றும் உருவாகும். அச்சுறுத்தல் மற்றும் சிறைத்தள்ளுதல் போன்றவற்றினால் மனிதர்களது அரசியல் சிந்தையை இல்லாதொழிக்க முடியாது” – என்றும் மஹிந்த கூறியுள்ளார். 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட யுத்தம் குறித்தும் கருத்துத் தெரிவித்த மஹிந்த,யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்ததன் மூலம் நாட்டில் தினந்தோம் இடம்பெற்றுவந்த உயிரிழப்புக்களையும்,நாடு இரண்டாகப் பிளவடைவதையும் நிறுத்தியதாகவும் பெருமிதம் வெளியிட்டார். “இந்த நாட்டிலுள்ள தமிழ் மக்களுக்கு எதிராகவும், முஸ்லிம் மக்களுக்கு எதிராகவும் நாங்கள் யுத்தம் செய்யவில்லை. யுத்தத்தில் ஈடுபட்ட போராளிகளுக்கு எதிராகவே போர் தொடுத்தோம் என்பது உண்மைதான். இந்த யுத்தம் 30 வருடங்களாக நடைபெற்றது.
இந்தப் போரில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உயிரிழந்த இளைஞர்களின் எண்ணிக்கை எத்தனை? தினமும் குண்டுகள் வெடித்தன. தினந்தோறும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. அங்கும் உயிரிழந்தார்கள். இங்கும் பலியானார்கள். இந்த உயிரிழப்புக்களை நிறுத்தவே நாங்கள் போராடினோம். தினந்தோறும் மக்கள் உயிரிழப்பதையும், நாடு இரண்டாகப் பிளவடைவதையும் நிறுத்தி ஒன்றாக பணிசெய்வதற்கே போராடினோம். ஒருவேளை நாடு பிளவடைந்திருந்தால் வடக்கிலிருந்தோ அல்லது கிழக்கிலிருந்தோ எவரும் இங்குவர முடியாது.
புறம்பான ஒரு நாட்டை ஏற்படுத்துவதிலிருந்து விலக்கி அனைவரையும் ஒன்றிணைத்து ஒரே நாட்டில் ஒருதாய் பிள்ளைகளாய் வாழவே நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். யுத்தத்தை நிறுத்தியபடியினால் எமக்கொரு பொறுப்பு ஏற்பட்டது. யுத்தத்தில் ஈடுபட்ட போராளிகளை புனர்வாழ்க்கு உட்படுத்தினோம். 12 ஆயிரத்து 500 போராளிகளுக்கு புனர்வாழ்வளித்து சமூகமயப்படுத்தினோம்.அப்பகுதிகளில் அடிப்படை வதிகளையும் ஏற்படுத்திக்கொடுத்தோம். வீதி, குடிதண்ணீர் வசதி, மின்சாரம் போன்றவற்றை செய்துகொடுத்தோம். 30 வருடகாலமாக பின்நோக்கிச் சென்றிருந்த வடக்கு பகுதியை முன்நோக்கி நகர்த்தியுள்ளோம்” – என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.