வடமாகாண முதலீட்டாளர் சம்மேளன அங்குரார்ப்;பண நிகழ்வு, இன்று திங்கட்கிழமை (22) காலை 9.30 மணிக்கு, யாழ். மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.
வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் முன்னெடுப்பில், இந்த முதலீட்டாளர்கள் சம்மேளனம் உருவாக்கப்பட்டுள்ளது. இது சார்ந்த தகவல் பிரிவு ஒன்றும், யாழ். மாவட்டச் செயலகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வடமாகாண இளைஞர்களின் வேலையில்லாப் பிரச்சினையை தீர்த்தல், தொழிற்பயிற்சிகளை ஊக்குவித்தல், முதலீட்டாளர்களை வட மாகாணத்துக்கு பொருத்தமான முதலீட்டு துறைகளுடன் இணைத்தல் ஆகிய நோக்கங்களுடன் இந்த முதலீட்டாளர்கள் சம்மேளனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், இந்திய துணைத்தூதரக யாழ். அலுவலக கொன்சலாட் ஏ. நடராஜன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, ஈ.சரவணபவன், அங்கஜன் இராமநாதன், எஸ்.சிவமோகன், வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் வட மாகாண சபை அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அத்துடன், முதலீட்டுச்சபை, கைத்தொழில் அபிவிருத்தி சபை, தேசிய தொழில் முனைவோர் அபிவிருத்தி அதிகார சபை, வங்கிகள், சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை, பனை அபிவிருத்திசபை மற்றும் முதலீட்டாளர்கள் துறைசார் ஆர்வலர்களும் இதில் பங்கேற்றனர்.