வட மாகாண முதலீட்டாளர் சம்மேளனத்தின் அங்குரார்ப்பண நிகழ்வை, முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் ஏற்பாட்டில் யாழ். மாவட்ட செயலகத்தில் வடமாகாண முதலீட்டாளர் சம்மேளன அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.
எனினும் அவர் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துள்ளார்.
இந்த நிலையில், வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து செயற்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளதுடன், குறித்த முதலீட்டாளர்கள் சம்மேளனம் அமைப்பது தொடர்பில் உரிய நிபுணர்களுடன் கலந்துரையாடவில்லை எனவும், கூறப்படுகின்றது.
குறித்த முதலீட்டாளர் சம்மேளன அங்குரார்பண நிகழ்விற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, ஈஸ்வரபாதம் சரவணபவன் மற்றும் எஸ்.சிவமோகன், வடமாகாண சபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், வடமாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் உட்பட வடமாகாண சபை உறுப்பினர்கள் பரம்சோதி, சயந்தன், சர்வேஸ்வரன், சிவயோகன், ஆகியோர்கள் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.