உதயன் நாளிதழில் கடந்த மாதம் 28ஆம் திகதி வெளியான செய்தி ஒன்று தொடர்பில் “உதயன்” ஆசிரியர் ரி.பிரேமானந்துக்கு எதிராக யாழ். நீதிவான் மாணிக்கவாசகர் கணேசராஜா நீதிமன்ற நடவடிக்கைகள், நீதிமன்ற விசாரணைகள் போன்றவற்றை முன்னெடுப்பதற்கும், பிறேமானந்தைக் கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவு எதனையும் பிறப்பிப்பதற்கும் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
பத்திரிகை ஆசிரியர் பிரேமானந்த் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட தடை உத்தரவு கோரும் ரிட் மனுவை இன்று காலை பரிசீலனைக்கு எடுத்த நீதியரசர்கள் எஸ்.ஸ்ரீஸ்கந்தராசா, திபாலி விஜேசுந்தர ஆகியோரைக் கொண்ட ஆயம் மேற்படி இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்திருக்கின்றது.
எதிர்வரும் 20ஆம் திகதி இந்த ரிட் மனு மீண்டும் நீதிமன்றில் பரீசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் போது மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிவான் கணேசராஜாவுக்கு அழைப்பாணை அனுப்பவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
“நாடாளுமன்றில் கூறப்படும் விடயங்களை விமர்சிக்க நீதிமன்றுக்கு அதிகாரமில்லை – சுமந்திரன் எம்.பி நேற்று சுட்டிக்காட்டு” – என்ற தலைப்பில் கடந்த 28ஆம் திகதி “உதயன்” நாளிதழில் வெளியான செய்தி ஒன்று தொடர்பில் விளக்கமளிக்குமாறு தம்மை நீதிமன்றுக்கு அழைத்த யாழ்.நீதிவான் சட்டமுறையற்ற வகையில் தம்மை பகிரங்க நீதிமன்றத்தில் நீதிவானிடம் மன்னிப்புக் கோருமாறு பலவந்தப்படுத்தினார் என்ற சாரப்பட “ரிட்” மனு ஒன்றை “உதயன்” ஆசிரியர் பிரேமானந்த் கடந்த புதனன்று கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
யாழ்.நீதிவானின் சட்டமுறையற்ற நடவடிக்கைகளில் இருந்து தமக்குப் பாதுகாப்பு தருமாறும் கோரி “உதயன்” ஆசிரியர் தாக்கல் செய்திருந்த இந்த மனுவை இன்று காலை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்ற ஆயம், மனுதாரரின் கோரிக்கையின் படி யாழ்.நீதிவானுக்கு எதிராக இடைக்காலத் தடை உத்தரவு விதித்ததுடன் மனுவை எதிர்வரும் 20ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது. மனுதாரர்கள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கனகஈஸ்வரன், மற்றும் சட்டத்தரணிகள் வி.புவிதரன், இரான் கொரியா, நிரான் அங்கிட்டல் ஆகியோர் மன்றில்ஆஜராகி வாதிட்டனர்.
தனது அதிகாரத்துக்கும் நியாயாதிக்கத்துக்கும் அப்பாற்பட்ட விதத்தில் இவ்விவகாரத்தை நீதிவான் விசாரிப்பதற்கு எதிராக இடைக்காலத் தடையும் பின்னர் நிரந்தரத் தடையும் விதிக்கும்படியும் , மேற்படி செய்திக்காகப் பத்திரிகை ஆசிரியருக்கு எதிராக கைது உத்தரவு எதனையும் யாழ். நீதிவான் பிறப்பிக்காமல் இருப்பதற்கான தடை உத்தரவை வழங்கும்படியும் மனுவில் கோரியிருந்தார்.
ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கத்தின் மற்றும் சட்டத்தரனி குருபரன் சட்டத்தரணி சுமந்திரன் ஆகியோரின் சத்தியக்கடதாசிகளும் இந்த மனுவுக்கு வலுவுட்டும் விதத்தில் மனுவுடன் இணைக்கப்பட்டிருந்தது.