முன்னாள் புலிப் போராளிகளுக்கு, புனர்வாழ்வு நிலையங்களில் விஷ ஊசி ஏற்றப்பட்டதாகவும், இதனால் அவர்களுக்குப் புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்பட்டுள்ளதாகவும், வடக்கிலுள்ள சில அரசியல்வாதிகள் பொய்க்குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர் என, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.
தெல்கொடையிலுள்ள ஸ்ரீ சம்போதி விகாரையில் வைத்து, ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
வடக்கிலுள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்த்து, நல்லிணக்கத்தை ஏற்படுத்த பாரிய முயற்சி செய்துவருகின்ற நேரத்திலேயே, இவ்வாறான பொய்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவதாக அவர் தெரிவித்தார். சர்வதேசத்திலிருந்து இங்கு வருபவர்கள் உட்பட எவரேனும், அரசாங்கத்தின் அனுமதியைப் பெற்ற பின்னர், புனர்வாழ்வு முகாம்களுக்குச் சென்று அவ்வேலை செய்யப்பட்டுள்ளதா என்பதைப் பார்க்க முடியும் எனவும் அவர் கூறினார்.