கடந்த 5 வருடங்களில், சிரியாவில் உள்ள அரசாங்க சிறைச்சாலைகளில் கிட்டத்தட்ட 18000 பேர் உயிரிழந்துள்ளதாக அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு கூறியுள்ளது.
சிறைச்சாலைகளில், அடித்தல், மின்சார அதிர்ச்சியளித்தல் மற்றும் பாலியல் வல்லுறவு உள்ளிட்ட உடல் மற்றும் உளவியல் துஷ்பிரயோகத்துக்கு கைதிகளை பெரிய அளவில் உள்ளாக்குவதாக, இந்த மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.
தனது அறிக்கையில், சித்திரவதையால் பாதிப்படைந்த 65 நபர்களின் வாக்குமூல சாட்சியங்களை அம்னெஸ்டி அமைப்பு ஆவணப்படுத்தியுள்ளது.
சிறை காவலில் கைதிகள் உயிரிழப்பதை, தாங்கள் நேரில் கண்டுள்ளதாக சித்திரவதை செய்யப்பட்ட பலரும் தெரிவித்துள்ளனர். சில கைதிகள் அடித்தே கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும், பல முன்னாள் கைதிகள், தாங்கள் சிறை அறைகளில் இறந்த உடல்களுடன் தங்க வைக்கப்பட்டதை விவரித்துள்ளனர்.
இது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு வழக்கமாக சிரியா அரசு மறுப்பு தெரிவிக்கும்.