செல்ஃபி’ புகைப்படம் எடுக்க முயன்று கிணற்றில் விழுந்த சிறுவனின் உடல் இரண்டு நாட்களுக்கு பின்பு மீட்கப்பட்டுள்ளது.
70 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த அந்த 17 வயது சிறுவனின் பெயர் ஹரிஷ் என்றும், சில நண்பர்களுடன் ‘செல்ஃபி’ புகைப்படம் எடுக்க முயன்ற போது இந்த விபத்து நடைபெற்றதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 15-ஆம் தேதியதன்று (திங்கள்கிழமை) கிணற்றில் விழுந்த அந்த சிறுவன் மற்றும் அவனது நண்பர்களின் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதிவாசிகள் அங்கு கூடியுள்ளார்கள்.
அவர்களின் முயற்சிகள் எதுவும் பயனளிக்காததால், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு கிணற்றில் விழுந்த ஹரிஷை தேடும் பணிகள் துவங்கப்பட்டது.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பயனளிக்காத காரணத்தால், தூத்துக்குடியிலிருந்து வரவழைக்கப்பட்ட 7 பேரை கொண்ட சிறப்பு பறிச்சி பெற்ற ஸ்கூபா எனப்படும் மூச்சு விட உதவும் சாதனங்களுடன் நீந்துபவர்கள், அச்சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டார்கள்.
நேற்று (புதன்கிழமை) காலையில், மீட்கப்பட்ட அச்சிறுவனின் உடல், பின்னர் அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
‘செல்ஃபி’ புகைப்படம் எடுக்க முயன்ற 16 வயது சிறுவன் ஒருவன் சென்னை வண்டலூர் அருகே ஓடும் ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்ததும், கொல்லி மலையில் உள்ள பாறை மீது ஏறி நின்று ‘செல்ஃபி’ புகைப்படம் எடுக்க முயன்ற 25 வயது இளைஞன் ஒருவன் பலியானதும், கன்னியாகுமரியில் ஜோடியாக ‘செல்ஃபி’ புகைப்படம் எடுக்க முயன்ற இளம் தம்பதியர் பேரலையில் இழுத்து செல்லப்பட்டு இறந்ததும் தமிழக ஊடக செய்திகளில் கடந்த காலங்களில் பதிவாகியுள்ளன.
இது போன்ற ‘செல்ஃபி’ மோகத்தால் விபத்துக்களும், மரணங்களும் தமிழகத்தில் அதிகரிக்க துவங்கியுள்ளதாகவும், அவற்றை கட்டுப்படுத்த தகுந்த சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
கும்பகோணத்தில் நடைப்பெற்ற மகாமகம் நிகழ்வின் போதும், சமீபத்தில் நடைபெற்ற இந்திய சுதந்திர தின கொண்டாட்டங்களின் போதும் கூட ‘செல்ஃபி’ புகைப்படம் எடுக்க அரசு தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.