வலி. வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் 640 ஏக்கர் காணி அடுத்த வாரம் மக்கள் மீள்குடியமர்வுக்காக விடுவிக்கப்படுகிறது.
வலி. வடக்கில் 1500 ஏக்கர் காணியை விடுவிக்குமாறு மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அண்மையில் அமைச்சரவை பத்திரமொன்றை தாக்கல் இதையடுத்து கடந்த வாரம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியார்ச்சி பலாலி வந்து மாவட்டச் செயலர் மற்றும் படைத்தரப்புகளுடன் கலந்துரையாடினர். இந்நிலையில் முதல் கட்டமாக 640 ஏக்கர் நிலப்பரப்பு அடுத்த வாரம் விடுவிக்கப்படவுள்ளது.
நேற்றைய தினம் பலாலி படைத்தலைமையகத்தில் மாவட்ட இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்கவி தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதையடுத்து மாவட்டச் செயலர் நா.தேவநாயன் தலைமையிலான குழுவினர் விடுவிக்கப்பட அடையாளப்படுத்தப்பட்ட காணிகளை நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
சாந்தைச் சந்தியிலிருந்து தையிட்டி ஊடாக ஊறணிச் சந்தி வரையான வீதியின் மேற்குப் பக்கம் முழுமையாக விடுவிக்கப்படுகிறது. வீதியின் கிழக்குப் பக்கம் வீதிக்கரையுடன் இருக்கின்ற பிரதேசம் மாத்திரம் முதல் கட்டமாக விடுவிக்கப்படவுள்ளது.
அத்துடன் காங்கேசன்துறை மத்தி காங்கேசன்துறை கிழக்கு, தையிட்டி, தையிட்டி கிழக்கு, பளை வீமன்காமத்தின் முன்னர் விடுவிக்கப்பட்ட எஞ்சிய பகுதி என்பன (ஜே-233, ஜே -235,ஜே -236 ,ஜே – 240) விடுவிக்கப்படவுள்ளது.
இப்பிரதேசங்களின் எல்லையில் உள்ள இராணுவ வேலிகள் பின்னகர்த்தும் வேலைகள் இடம்பெற்று வருகின்றது. அத்துடன் விடுவிக்கப்படும் பகுதியிலுள்ள முகாம்களை இடமாற்றம் செய்வதற்குரிய நிதி கிடைக்கப்பெறவில்லை என்றும் அவை விரைவில் கிடைக்கப்பெற்றதும் அந்த முகாம்கள் இடமாற்றம் செய்யப்படும் என்றும் பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்