காதலித்து வந்த யுவதியை கழற்றி விட, அவருக்கு குறுஞ்செய்தி ஊடாக மரண அச்சுறுத்தல் விடுத்த காதலனையும் அதற்கு உடந்தையாக இருந்த அழகுக்கலை நிலையம் ஒன்றில் வேலை பார்க்கும் யுவதி ஒருவரையும் பிலியந்தலை பொலிஸார் கைது செய்துள்ளனர். காதலி செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக சூட்சுமமான விசாரணை ஒன்றினை முன்னெடுத்த பிலியந்தலை பொலிஸார் இவர்களை நேற்று கைது செய்துள்ளனர்.
தனது காதலனின் முன்னாள் காதலி என தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் ஒரு யுவதி, எஸ்.எம்.எஸ். ஊடாக தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக யுவதி ஒருவர் பிலியந்தலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளார். தான் தனது காதலனை அதிகம் நேசிப்பதாகவும், இந் நிலையில் காதலனை கழற்றிவிடாமல் தொடர்ந்து காதலித்தால் தன்னை தீர்த்துக்கட்டுவதாக பழைய காதலியாக தன்னை அடையாளம் காட்டிக்கொள்ளும் யுவதி மிரட்டுவதாகவும், காதலனை கைவிட்டால் 50 இலட்சம் ரூபா பணம் தருவதாக கூறியதாகவும் முறைப்பாட்டாளரான யுவதி பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.
இந் நிலையில் இது குறித்து விசாரணைகளை ஆரம்பித்த பிலியந்தலை பொலிஸார் குறுஞ்செய்தி வந்த தொலைபேசி இலக்கத்தை மையப்படுத்தி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதன் போது குறுஞ்செய்தி அனுப்பிய தொலைபேசி இலக்கமும் அதனை பெற்றுக்கொண்ட தொலைபேசி இலக்கமும் ஒரே அடையாள அட்டையில் பெறப்பட்டுள்ளதை பொலிஸார் அவதானித்தனர். இதன்போது அவ்வடையாள அட்டை யாருடையது என தேடிய பொலிஸார் அது முறைப்பாட்டாளரான யுவதியுடையது என தெரியவந்தது.
இதனையடுத்து முறைப்பாட்டாளரிடம் வாக்குமூலம் பதிவு செய்த பொலிஸார் அதன் பின்னர் அவர் காதலனிடமும் வாக்கு மூலம் பதிவு செய்தனர். காதலனின் வாக்கு மூலத்தில் வெளியான தகவல்களுக்கு அமைய அழகுக்கலை நிலையம் ஒன்றில் வேலை பார்க்கும் பெண்ணொருவரிடமும் பொலிஸார் விசாரித்தனர்.
இதன்போதே காதலியை கழற்றிவிட காதலனால் நடத்தப்பட்ட நாடகமே இந்த மரண அச்சுறுத்தல் என்பதும் அச்சுறுத்தல் விடுத்தவர் பழைய காதலியல்ல எனவும் அவர் அழகுக்கலை நிலைய ஊழியர் எனவும் தெரியவந்துள்ளது.
குறித்த அழகுக்கலை நிலைய ஊழியரான யுவதிக்கு 5000 ரூபா கொடுத்து இந்த அச்சுறுத்தலை செய்யுமாறு முறைப்பாட்டாளரான யுவதியின் காதலனே அறிவுறுத்தியுள்ளதாகவும் இது தொடர்பில் தனது காதலியின் பெயரிலேயே எடுக்கப்பட்ட சிம் அட்டையொன்றினையும் அவர் பெற்றுக்கொடுத்துள்ளதாகவும் விசாரணைகளில் உறுதியாகியுள்ளது.
இந் நிலையிலேயே முறைப்பாட்டாளரின் காதலனையும் அவருக்கு உதவிய அழகுக் கலை நிலைய யுவதியையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட காதலன் கல்கிசை பகுதியை சேர்ந்தவர் எனவும் அவர் இரு பிள்ளைகளின் தந்தை எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.