காணாமல் போன மாணவி சடலமாக மீட்பு

காரைநகர் பகுதியில் காணமல் போயிருந்த பாடசாலை மாணவி யொருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காரைநகர் திக்கரையை சேர்ந்த சன்முகராஜா துவாரகா எனும் பதினாறு வயதான பாடசாலை மாணவியே நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு சுமார் எட்டுமணியளவில் வீட்டில் இருந்த நிலையில் குறித்த சிறுமி காணமல் போயிருந்தார்.

இதனையடுத்து காணாமல் போன மாணவியை அவரது பெற்றோர் தேடிய நிலையில் இது தொடர்பாக ஊர்காவல்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றையும் மேற்கொண்டிருந்தனர்.

குறித்த மாணவியை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் மற்றும் பெற்றோர் இணைந்து ஈடுபட்டிருந்த நிலையில் மாணவியின் வீட்டில் இருந்து சுமார் 300 மீற்றர் துாரமளவில் உள்ள வளவொன்றுக்குள் உள்ள கிணற்றுள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வளவிற்குள் தேங்காய் பறிப்பதற்காக வந்த சிலரே கிணற்றுள் சடலமிருப்பதை கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

மாணவி எவ்வாறு வீட்டில் இருந்து காணாமல் போயிருந்தார் இவர் கொலை செய்யப்பட்டு கிணற்றுள் போடப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது தொடர்பில் ஊர்காவல்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி பாடசாலைக்குச் சென்ற வித்தியா கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டநிலையில் மறுநாள் பற்றைக்குள் இருந்து சடலமாக மீட்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts