Ad Widget

வட்டுவாகல் காணிகளை விடுவிப்பிதற்கா இராணுவத்தளபதி முல்லைத்தீவுக்கு பயணம்?

இலங்கை கடற்படையால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் பகுதி காணிகளை பார்வையிட இராணுவத்தளபதி கிருஷாந்த டி சில்வா நேற்றைய தினம் அப் பகுதிக்கு விஜயம் செய்துள்ளார். இதனால் முல்லைத்தீவில் அரச படைகளின் பாதுகாப்பு நடவடிக்கை அதிகரிக்கப்பட்டிருந்தது.

முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் பொதுமக்களுக்குச் சொந்தமான 617 ஏக்கர் காணிகளை அரச கடற்படை ஆக்கிரமித்துள்ளது. அக் காணிகளை நிரந்தரமாக சுவீகரிக்கும் நோக்கில் காணி அளெவீடு செய்ய அண்மையில் முற்பட்டபோது அப் பகுதி மக்கள் அதனை முற்றுகையிட்டுத் தடுத்திருந்தனர்.

பரந்தன் முல்லை வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் இராணுவத்தை வெளியேறுமாறும் தமது நிலத்தையும் உரிமையையும் மீளளிக்குமாறும் கோரினர். அப் பகுதியை பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கிய இந்தப் போராட்டம் உலக அளவில் கவனத்தை ஈர்த்ததுடன் அரசுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

இலங்கையின் புதிய அரசு காணிகளை விடுவிப்பதாக காட்டிக்கொண்டு காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது என்ற குற்றச்சாட்டு இதன்போது பலராலும் முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில் குறித்த காணிகளை விடுவிக்க அரசு தீர்மானித்திருப்பதாக கூறப்படுகிறது.

காணிகளை விடுவிக்கும் நடவடிக்கையின் பொருட்டு இராணுவத்தளபதி குறித்த பகுதிக்கு நேற்று விஜயம் செய்துள்ளார். எனினும் நேற்றைய தினமே காணிகளை விடுவிக்கும் செய்தி எட்டும் என நம்பியிருந்தபோதும் ஏமாற்றமே அளித்துள்ளதாக வட்டுவாகல் பகுதி மக்கள் கூறுகின்றனர். இதன்போது ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு விடுவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் பாதுகாப்புச் செயலாளர் இப் பகுதிக்கு அவரசமாக விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இன்றும் அவரது விஜயம் இடம்பெறலாம் எனக் கூறப்படுகிறது. அவர் பார்வையிட்ட பின்னர் மக்களுக்கு காணிகளை வழங்க ஏற்பாடுகள் இடம்பெறுவதாகவும் கூறப்படுகிறது. எவ்வாறெனினும் காணிகள் விரைவில் விடுவிக்கப்படவேண்டும் என்ற ஏக்கத்துடன் மக்கள் காணப்படுகின்றனர்.

இதேவேளை கடந்த கால இராணுவத்தளபதியாலும் பாதுகாப்பு செயலாளராலும் அனுமதி வழங்கப்பட்டு முல்லைத்தீவில் அமைக்கப்பட்ட இராணுவ உணவு விடுதிகளை மூடுமாறு இராணுவத்தளபதி கிருசாந்த டி சில்வா உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இராணுவ உணவு விடுதிகள் பலவும் செயலிழந்த நிலையில் காணப்பட்டன.

ஏ- 9 வீதி உட்பட வன்னிப் பகுதியின் பல்வேறு இடங்களிலும் பல நூற்றுக்கணக்கான இராணுவ உணவு விடுதிகள்இயங்குகின்றன. முல்லைத்தீவில் இராணுவத்தினர் மதுபானச்சாலை ஒன்றையும் நடத்தி மூடியிருந்தனர். எனினும் சில உல்லாச விடுதிகளை இராணுவத்தினர் நடத்தி வருகின்றனல். இதனால் அப் பகுதிகளை சேர்ந்தவர்களின் உணவு விடுதி வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதும் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts