புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் மர்மமான முறையில் உயிரிழப்பதற்கு சர்வதேச விசாரணை கோரி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் கடந்த வியாழக்கிழமை பிரிட்டனில் நடைபெற்றது.
பிரிட்டிஷ் பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலம் அமைந்துள்ள டவுனிங் வீதியில் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.
இறுதிப் போரில் பொதுமக்கள் உள்ளிட்ட போராளிகள் பலர் கொன்று குவிக்கப்பட்டனர். இறுதிப் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் இராணுவத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க முன்னாள் போராளிகள் பலர் இராணுவத்தினரிடம் சரணடைந்தனர்.
இவ்வாறு சரணடைந்த போராளிகள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட நிலையில், அவர்களில் 104 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.
இன்னும் பல போராளிகள் இடுப்புக்கு கீழ் இயங்க முடியாத நிலையில் உள்ளனர். இவை பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன
எனவே, குறித்த விடயம் தொடர்பில் நீதியான முறையில் சர்வதேச விசாரணை ஒன்று இடம்பெற வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவரகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் புலம்பெயர் தமிழர்கள் பலரும் கலந்துகொண்டனர்.