பிறேசில் நாட்டு றியோ நகரில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டி இம்முறை பல சுவாரசியங்களைக் கொண்டு தொடங்கியுள்ளது.
Yusra Mardini என்ற பெண் போட்டியாளர் நீச்சல் விளையாட்டில் தெரிவுப்போட்டியில் பங்குபற்றினார். அதில் அவர் இரண்டாவதாக வந்தாலும் அரையிறுதிப்போட்டிக்குத் தகுதிபெறும் வாய்ப்பை சில செக்கன்களால் இழந்தார். ஆனால் உலகமக்களின் மனங்களில் நீங்கா இடம்பெற்றிருக்கிறார்.
காரணம் அவர் ஓர் அகதி. எந்தவொரு நாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்தாமல் அகதியாகவே ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் அணியைச் சேர்ந்த Yusra Mardini ஓராண்டுக்கு முன்னர் உயிர்காக்க கடலில் தத்தளித்த அகதி. சிரியாவிலிருந்து தன் குடும்பத்தோடு உயிர்தப்பியோட கடல்வழிப் பயணம் மேற்கொண்ட பெண். படகுடைந்து மூழ்கப்போகும் அபாயத்தில் 20 வரையான அகதிகளை தனது நீச்சல் திறமையால் காப்பாற்றியவள். கடலில் தத்தளித்தபோது ஒரு நீச்சல் வீராங்கனையான தான் கடலில் மூழ்கிச்சாவதை எண்ணிக் கவலை கொண்டவள் நேற்று தன்திறமையைக் காட்ட ஒலிம்பிக்கில் நீந்தினாள்.
இம்முறை நாடற்று உலகத்தில் அகதிகளாக இருப்போரை பிரதிநிதித்துவப்படுத்தி 44 பேர் கொண்ட ‘அகதிகள் அணி’ என்று ஓரணி ஒலிம்பிக்கில் கலந்துகொண்டுள்ளதும், ஒலிம்பிக் தொடக்கவிழாவில் அவ்வணி தனியாக ஒரு கொடியின் கீழ் பவனிவந்ததும் பார்வையாளர் அனைவரும் எழுந்துநின்று அவ்வணிக்கான தமது மரியாதையைச் செலுத்தியும், செய்தியறிந்து அமெரிக்க அதிபர் ஒபாமா அவர்களுக்கு தனது வாழ்த்துச் செய்தியை அனுப்பியதும் உலகம் முழுவதும் பிரபலமான உணர்வுபூர்வமான செய்தியாக உலா வருவது குறிப்பிடத்தக்கது.