வலி. வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள கிணறுகளில் கழிவு எண்ணெய் கலந்துள்ளதா என்பது தொடர்பிலும் ஆய்வுசெய்து அறிக்கை சமர்பிக்குமாறு நீர்வள சபைக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.யூட்சன் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த கிணறுகளில் உள்ள நீரை மக்கள் பருக முடியுமா இல்லையா என்பது தொடர்பாகவும் ஆய்வுசெய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அவர் அறிவுறித்தியுள்ளார்.
கிணறுகளில் கழிவு எண்ணெய் கலந்துள்ளதால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரான முறையில் குடிநீர் விநியோகம் இடம்பெறுவதில்லை என இரண்டு பொதுச்சுகாதார பரிசோதகர்களால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நேற்று மல்லாகம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துகொள்ளப்பட்ட போதே நீதவான் இவ்வாறு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
கடந்த வழக்கு தவனையின் போது சுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்துள்ளமை தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், குறித்த அறிக்கை நேற்றும் சமர்ப்பிக்கப்படவில்லை.
இந்த நிலையில், நீதிமன்றில் முன்னிலையாகியிருந்த மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரி, குறித்த பிரதேசத்தை அவசர நில பிரகடனம் செய்வதற்கு நிதி பற்றாக்குறையாக உள்ளதாகவும் அவற்றை பெற்றுக்கொள்வதற்கு நீதிமன்றம் வட மாகாண சபையிடம் கோர வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இவை தொடர்பான கட்டளை, எதிர்வரும் 12 ஆம் திகதி வழங்கப்படும் எனவும் நீதவான் குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன், சுன்னாகம் பகுதிகளிலுள்ள 150 கிணறுகள் தொடர்பாகவும், அவற்றின் தற்போதைய நிலைமை தொடர்பாகவும் ஆய்வுசெய்து அறிக்கை சமர்பிக்க வேண்டும் எனவும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு அதிகார சபைக்கும் நீதவான் அறிவுறுத்தியிருந்தார்.
சுற்றுசுழல் மற்றும் தொழில்சார் சுகாதார பிரிவு, தனது அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் சட்டத்தரணிகளான தேவராஜா, மணிவண்ணன், சுகாஸ், பார்தீபன், ஜெயரூபன் ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.
அத்துடன், வழக்கு தொடர்பான கட்டளையை எதிர்வரும் 12 ஆம் திகதி பிறப்பிக்கப்படும் எனவும், அதுவரை வழக்கு ஒத்திவைக்கப்படுவதாகவும் நீதிவான் குறிப்பிட்டிருந்தார்.