முன்னாள் போராளிகளுக்கு ஊசிபோடப்பட்ட விவகாரம்!: பரிசோதனை நடத்த தயார் என்கிறது அரசாங்கம்

முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்ட காலத்தில் உடலியல் ரீதியில் ஏதாவது கெடுதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் அது தொடர்பில் முறைபாடுகள் முன்வைக்கப்பட்டால் அவர்களுக்கு உடற்பரிசோதனை நடத்துவதற்கு தயாராக இருக்கின்றோம் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளார் மாநட்டில் கலந்து கொண்டிருந்த அமைச்சரிடம் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வடக்கில் இடம்பெறும் நல்லிணக்க பொறிமுறை குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட முன்னாள் போராளியொருவர் தமக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டபோது ஊசி போடப்பட்டதாகவும் இதனால் தான் தற்போது சக்தி இழந்து காணப்படுவதாகவும் கூறியிருந்தார். அத்துடன் முன்னாள் போராளிகளுக்கு சர்வதேச தரம்வாய்ந்த உடற்பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்றும் காரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில்,

இது தொடர்பில் முறைப்பாடு முன்வைக்கப்பட்டால் முன்னாள் போராளிகளுக்கு உடற்பரிசோதனை செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். ஆனால் இது வரை எமக்கு அவ்வாறான எவ்விதமான அறிக்கையும் கிடைக்கப் பெறவில்லை. முறைப்பாடு வந்தால் நாம் பரிசோதனை செய்வோம்.

இலங்கையில் சர்வதேச தரம்வாய்ந்த மருத்துவர்கள் இருப்பதாக சர்வதேசம் கூறியுள்ளது. எனவே இங்கு பரிசோதனை நடத்தலாம். ஆனால் கடந்த ஏழு வருடங்களாக இவர்கள் எங்கே இருந்தனர். ஏன் இதனை வெளியில் கூறவில்லை என்ற கேள்வி எழுகின்றது. தற்போதுதான் வெளியில் கூறுகின்றனர். அப்படியிருந்தும் நாங்கள் பரிசோதனை நடத்துவோம் என்றார்.

Related Posts