‘10 எண்றதுக்குள்ள’ படத்துக்குப் பின் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘இருமுகன்’. ‘அரிமா நம்பி’ புகழ் ஆனந்த் சங்கர் இயக்கியிருக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா, நித்யா மேனன் நடித்திருக்கின்றனர். நீண்ட இடைவேளைக்குப் பின் விக்ரம் இரட்டை வேடமேற்று நடித்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மலையாள நடிகர் நிவின்பாலி, சிவகார்த்திகேயன் மற்றும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், லிசி, தம்பி ராமையா, இயக்குனர் ஹரி, மதன் கார்க்கி, ஒளிப்பதிவாளர் ராஜசேகர் உட்பட ஏராளமான நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
‘இருமுகன்’ படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லரை படக்குழு வெளியிட்டது. படத்தில் அகிலன் என்ற உளவுத்துறை அதிகாரியாக நடிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. தற்போது லவ் என்ற திருநங்கையாகவும் இப்படத்தில் விக்ரம் நடித்திருக்கிறார். படத்தின் பாடல்களை விட விக்ரமின் திருநங்கை அவதாரம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
‘சேது’ தொடங்கி ‘ஐ’ வரை தான் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரமாகவே மாறக்கூடியவர் என்பதை இப்படத்திலும் விக்ரம் நிரூபித்துக் காட்டியிருக்கிறார். இதனால் நயன்தாரா-விக்ரம் கெமிஸ்ட்ரியை விட விக்ரமின் திருநங்கை அவதாரமே ரசிகர்களைக் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘இருமுகன்’ படத்தை அக்டோபர் 2-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இருமுகன் டிரைலரை பார்க்க…