ரஜினிகாந்த் நடித்து, திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் ‘கபாலி’ படத்தின் வெற்றி விழா, சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடந்தது. விழாவில் பட அதிபர் எஸ்.தாணு கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-
“இன்று காலை நான் ரஜினிகாந்தை சந்தித்தேன். அப்போது அவரிடம் நான் பழைய நினைவுகளை எல்லாம் யோசித்துக் கூறிக்கொண்டிருந்தேன். நான் தயாரித்த ‘தெருப்பாடகன்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசும்போது, “நானும், தாணுவும் சேர்ந்து ஒரு படம் பண்ணப் போகிறோம்” என்று சொன்னார்.
அவர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்தபோது விரைவில் குணம் அடைய வேண்டும் என்று ராகவேந்திரா சாமிக்கு விரதம் இருந்தேன். அதற்கு பலன் கிடைத்தது. ரஜினிகாந்த் குணமாகி திரும்பி வந்தார். திடீரென்று ஒருநாள் அவர் என்னை அழைத்து, “நாம் ஒரு படம் பண்ணலாம்” என்றார். அவரும், நானும் ஒன்றாக அமர்ந்து டைரக்டர் ரஞ்சித்திடம் கதை கேட்டோம்.
ரஞ்சித் கதை சொல்லி முடித் ததும், நான் எழுந்து நின்று கைதட்டினேன். அவரை ரஜினி காந்த் அணைத்துக் கொண்டார். ‘கபாலி’ படம் தயாரிப்பில் இருந்தபோது, ரஜினிகாந்த் 24 மணி நேரம் உழைத்தார். அதிகாலை 7 மணிக்கு படப்பிடிப்புக்கு வந்த அவர் மறுநாள் காலை 7 மணிக்கு சென்றார்.
அப்போது அவரிடம், “இப்படி உழைத்தால் உடல் நலம் என்ன ஆவது?” என்று கேட்டேன். அதற்கு அவர், “எல்லோரும் ஆர்வமாக உழைக்கிறார்கள். இப்படியே போகலாம்” என்று கூறினார். உடல் நலம் சரியில்லாதபோது கூட, அவர் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்தார்.
‘கபாலி’ படத்தின் வசூல், ஒரு பிரமாண்டம். சென்னை நகரில் மட்டும் 6 நாட்களில் ரூ.6 கோடி வசூல் செய்து இருக்கிறது. நாளை, அது ரூ.7 கோடி ஆகிவிடும். இது, ஒரு மிகப்பெரிய சாதனை. டைரக் டர் ரஞ்சித்தை அழைத்து, இன்னொரு படம் எனக்கு இயக்கி தர வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.”
இவ்வாறு எஸ்.தாணு பேசினார்.
விழாவில் டைரக்டர் ரஞ்சித், நடிகர்கள் கலையரசன், ஜான் விஜய், நடிகை ரித்விகா, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் படக் குழுவினர் கலந்து கொண்டு பேசினார்கள்.