இராணுவத்தினர் மேற்கொள்ளும் அதீத ஆயுதப்பயிற்சியால் கர்ப்பிணி தாய்மார்களுக்கு திடீர் கருக்கலைவு!!

மன்னார் சன்னார் கிராம பகுதியில் இராணுவத்தினர் மேற்கொள்ளும் அதீத ஆயுதப்பயிற்சியால் அக் கிராமத்திலுள்ள பல கர்ப்பிணி தாய்மார்களுக்கு, திடீர் கருக்கலைவு ஏற்பட்டுள்ளதாகவும் கடந்த 2 மாதங்களுக்குள் சன்னார் கிராமத்தைச் சேர்ந்த 15 கர்ப்பிணி தாய்மார்களுக்கு இவ்வாறு கருக்கலைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்

நீதிப் பொறிமுறை தொடர்பான நல்லிணக்க பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான, வலய செயலணி இன்று (வியாழக்கிழமை) காலை மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தில் இடம்பெற்றது.

குறித்த செயலணியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த, சன்னார் கிராமத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இராணுவத்தினரின் பயிற்சி முகாமில் இருந்து சுமார் 500 மீற்றர் தொலைவில் மக்களின் குடியிறுப்பு காணப்படுவதாகவும், இராணுவ பயிற்சி முகாமில் மோட்டார் செல் பயிற்சி, கண்ணிவெடி செயலிழப்பு, கைக்கண்டு பயிற்சி மற்றும் துப்பாக்கி சூட்டு பயிற்சி போன்றவை இடம் பெற்று வருவதாகவும் கூறினார்.

இவ்வாறான பயிற்சி நடவடிக்கைகளின் போதே, பாரியளவிலான அதிர்வுகள் ஏற்படுவதாகவம், இதன் காரணத்தினால் குறித்த கிராமத்தில் உள்ள பல கர்ப்பிணி தாய்மார்களுக்கு திடீர் கருக்கலைவு ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

கடந்த 2 மாதங்களுக்குள் சன்னார் கிராமத்தைச் சேர்ந்த 15 கர்ப்பிணி தாய்மார்களுக்கு இவ்வாறு கருக்கலைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related Posts