இலங்கை, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் பல்லேகலயில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம், போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் இடைநிறுத்தப்பட்டிருந்ததுடன், பின்னர் மழை காரணமாக மூன்றாவது நாள் ஆட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டபோது, தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி, ஆறு விக்கெட்டுகளை இழந்து 282 ஓட்டங்களைப் பெற்று பலமான நிலையில் உள்ளது.
ஆறு ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்திருந்தபடி மூன்றாவது நாளினை ஆரம்பித்த இலங்கையணி ஆரம்பத்திலேயே மிற்செல் ஸ்டார்க்கின் பந்துவீச்சில் திமுத் கருணாரட்னவை இழந்ததோடு, குறிப்பிட்ட நேரத்தில் கௌஷால் சில்வாவின் விக்கெட்டையும் இழந்திருந்தது.
இவ்வாறாக, ஒரு பக்கமாக குறிப்பிட்ட இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்து கொண்டிருந்தாலும் இளஞ் சிங்கமான குஷால் மென்டிஸ் நிதானத்துடன் அதிரடியாக விளையாடி ஓட்டங்களை சேர்த்த வண்ணம் இருந்தார்.
கௌஷால் சில்வாவோடு 39 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்த மென்டிஸ், அணித்தலைவர் அஞ்செலோ மத்தியூஸுடன் 41 ஓட்டங்களை பகிர்ந்ததோடு, உப அணித்தலைவர் தினேஷ் சந்திமாலுடன் 117 ஓட்டங்களை பகிரும்போது, தனது கன்னிச் சதத்தைப் பூர்த்தி செய்தார்.
அதன் பின்னர், அறிமுக வீரர் தனஞ்சய டி சில்வாவுடன் 71 ஓட்டங்களை பகிர்ந்ததுடன், தற்போது களத்தில், ஆட்டமிழக்காமல் 169 ஓட்டங்களுடன் காணப்படுகின்றார். அவர் தனது ஓட்ட எண்ணிக்கையில், 20, நான்கு ஓட்டங்களையும் ஓர் ஆறு ஓட்டத்தையும் பெற்றார். மென்டிஸோடு, தற்போது களத்தில், ஐந்து ஓட்டங்களுடன் டில்ருவான் பெரேரா காணப்படுகின்றார்.
முன்னர் ஆட்டமிழந்தவர்களில், தினேஷ் சந்திமாள் 42, தனஞசய டி சில்வா 36 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பாக, மிற்செல் ஸ்டார்க், நேதன் லைன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஸ்டீவ் ஓஃப் கெவி, மிற்செல் மார்ஷ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
நேற்றய மூன்றாவது நாள் ஆட்டத்தின் போதும் 77.4 ஓவர்களே வீசப்பட்டிருந்த நிலையில், இன்றைய நான்காவது நாள் ஆட்டம், 15 நிமிடங்கள் முன்னதாக காலை 9.45க்கு ஆரம்பமாகவுள்ளது.