திருகோணமலை – குமாரபுரம் பகுதியில் இடம்பெற்ற படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 6 இராணுவ வீரர்களும் அனைத்துக் குற்றங்களில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த வழக்கு நேற்று அநுராதபுர நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை, தெஹிவத்த இராணுவ முகாமில் குறித்த இராணுவத்தினர் கடமையில் ஈடுபட்டிருந்த போது, 1996ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11ம் திகதி அல்லது அதனை அண்மித்த ஒரு தினத்தில் மூதூர் – கிளிவெட்டி குமாரபுரத்தில் இந்தக் கொலை சம்பவத்தினை மேற்கொண்டுள்ளதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
20 வருடங்களுக்கு முன்பு, இரவு வேளையில், இடம்பெற்ற இந்த படுகொலை சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர், மேலும் பலர் காயமடைந்தனர்.
மது போதையில் கிராமத்திற்குள் நுழைந்த இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்கள் அந்த கிராமத்தை சேர்ந்த தமிழர்கள்.
இந்த படுகொலை வழக்கில் தெகியத்த இராணுவ முகாமில் சேவையிலிருந்த 8 இராணுவ வீரர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. (இவர்களில் இருவர் இறந்து விட்டனர்)
1996ஆம் ஆண்டு மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் குறித்த அவர்கள், சாட்சிகளினால் அடையாளம் காணப்பட்ட நிலையில் திருகோணமலை மேல் நீதிமன்றத்திற்கு வழக்கு பாரப்படுத்தப்பட்டிருந்தது.
அன்றைய யுத்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு எதிரிகளின் வேண்டுகோளின் பேரில் பாதுகாப்பு கருதி சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் இந்த வழக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.