Ad Widget

யாழ்ப்பாண சிறையில் கொடுமைகள் அனுபவித்தோம்

சிறீலங்கா சிறையில் கொடுமைகள் அனுபவித்தோம் என்று விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் தெரிவித்து உள்ளனர்.

fishermen

மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 77 பேரை சிறீலங்கா கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தியதன் விளைவாக, மத்திய அரசு இலங்கை அரசுக்கு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக நேற்று முன்தினம் 49 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

வவுனியா சிறையில் இருக்கும் எஞ்சிய 28 மீனவர்கள் நேற்று விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், அவர்களில் 24 பேர் மட்டும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டனர். எஞ்சிய 4 மீனவர்களும் இன்னும் சில நாட்களில் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று விடுவிக்கப்பட்டுள்ள 24 மீனவர்களும், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதர் நடராஜனின் கட்டுப்பாட்டில் தற்போது உள்ளனர். அங்கு அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இன்னும் ஓரிரு நாட்களில் அவர்கள் தாயகம் திரும்புவார்கள்.

கடல் சீற்றத்தை பொறுத்து இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை இந்திய கடற்படையினரிடம் ஒப்படைப்பார்கள் என தெரிகிறது.

நேற்று விடுவிக்கப்பட்டுள்ள நாகை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் கூறியதாவது:-

நாங்கள் சர்வதேச எல்லை பகுதியில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த போது எங்களை துப்பாக்கி முனையில் சிறைபிடித்து தாக்குதல் நடத்தினார்கள். எங்களை (இலங்கை கடற்படையினரை) கண்ட உடன் ஓடினால் இப்படித்தான் தாக்குவோம் என்று தெரிவித்தனர். அவர்கள் எங்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

அங்கு எங்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கவில்லை. இரவு நேரத்தில் உணவுகள் வழங்கவில்லை. கழிப்பறைகள் சரியாக இல்லை. மனித கழிவுகளை நாங்களே அள்ளும் நிலை ஏற்பட்டது. படகுகளை பார்க்க வேண்டும் என்று தெரிவித்ததற்கு மறுப்பு தெரிவித்துவிட்டனர்.

சிறையில் அடைக்கப்பட்டு நீண்ட நாட்களான நிலையில், எங்களை விடுதலை செய்ய வேண்டும் என போராட்டம் நடத்த முடிவு செய்து இருந்த நேரத்தில் எங்களை விடுவித்துள்ளனர். ஆனால் படகுகளை விடுவிக்க மறுத்துவிட்டனர். தற்போது எங்களை விடுவித்தால் போதும் என்ற நிலைக்கு நாங்கள் வந்து விட்டோம். அந்த அளவுக்கு யாழ்ப்பாணம் சிறையில் கொடுமைகள் அனுபவித்துள்ளோம்.

ஆனால், படகுகளை விடுவிக்காமல் எங்களுக்கு எந்த பலனும் இல்லை. நாங்கள் தாயகம் திரும்பினாலும் எங்கள் வாழ்வாதாரமான படகுகள் இல்லை என்றால் எங்களால் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டில் சும்மா இருக்கும் நிலைதான் உருவாகும். எனவே மத்திய, மாநில அரசுகள் சிறீலங்கா அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி படகுகளை மீட்டு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

Related Posts