அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு ஆலோசகரான, இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனின் செயற்பாடுகள் குறித்து வருந்துவதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
முரளிதரனுக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுக்கள் இதுவரை முன்வைக்கப்பட்டுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால குறிப்பிட்டுள்ளார்.
அணி முகாமையாளர் சரித் சேனாநாயகவை கடுமையாக சாடியமை, அனுமதியின்றி பல்லேகல சர்வதேச விளையாட்டு மைதானத்தில் அவுஸ்திரேலிய அணியினருக்கு பயிற்சியளித்தமை போன்றனவே அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களாகும்.
எதுஎவ்வாறு இருப்பினும், இது குறித்து அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிறுவனத்துக்கு அறிவிக்கவுள்ளதாக திலங்க சுமதிபால சுட்டிக்காட்டியுள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்ட போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் முரளிதரன் பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்த மூன்று சந்தர்ப்பங்களில் அவரை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் பாதுகாத்ததாகவும், பயிற்சியாளராக அவரது தொழில் குறித்து பிரச்சினை இல்லை எனவும் எனினும் ஒழுக்க ரீதியான பிரச்சினைகள் காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அவரது பெயரில் அந்தக் கிராமத்தில் இடம்பெறவுள்ள விளையாட்டுப் போட்டியொன்றுக்காக, சர்வதேச விளையாட்டு மைதானத்தில், எதிரணியினருக்கு பயிற்சியளிப்பது, குறித்து மிகவும் வருந்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், முரளிதரனின் பெயருக்கு அது கலங்கத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.