உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் ரஜினிகாந்தின் கபாலி படத்தின் மலேசிய பதிப்பின் ‘கிளைமாக்ஸ்’ காட்சியில் அவர் போலீசில் சரணடைந்ததாக தோன்றும் எழுத்துகள் இந்திய ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் நேற்று வெளியான ‘கபாலி’ படம் ரஜினி ரசிகர்களிடையே பரவலான வரவேற்பை பெற்றுள்ள நிலையில் படத்தின் இறுதிக்கட்ட காட்சி அவர் துப்பாக்கியால் சுடப்படுவதுபோல் முடிவதில் சில ரசிகர்களுக்கு திருப்தி ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க, இதே கபாலி படத்தின் மலேசிய பதிப்பின் ‘கிளைமாக்ஸ்’ காட்சியில் துப்பாக்கி சப்தம் எதுவும் கேட்கவில்லை. அவர் போலீசில் சரணடைந்ததாக படத்தின் திரையில் தோன்றும் எழுத்துகளை மலேசியாவில் உள்ள ரஜினி ரசிகர்கள் தற்போது சமூக வலைத்தளங்களின் வாயிலாக பரிமாறி வருகின்றனர்.
இந்த தகவல் இந்திய ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
(பொதுவாக எல்லா சினிமாக்களின் கிளைமாக்ஸ்களும் அநீதி தோற்பது போலவும், நீதியும் தர்மமும் வெற்றி பெறுவதாகவும் முடிவதுதான் வாடிக்கை. அவ்வகையில், மலேசிய மண்ணில் நடப்பதாக பிண்ணப்பட்ட ‘கபாலி’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு ‘கேங்க்ஸ்டரின் முடிவு’ ‘மீண்டும் தொடரும்’ பாணியில் அமைவது அந்நாட்டு மக்களுக்கு ஏற்புடையதாக இருக்காது என்பதால் மலேசிய பதிப்பின் ‘கிளைமாக்ஸ்’ காட்சியில் மட்டும் அவர் போலீசில் சரணடைந்ததாக சித்தரிக்கப்பட்டுள்ளதா?)