Ad Widget

வட மாகாண மீள்குடியேற்ற செயலணி தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அதிருப்தி

வடமாகாண மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வடக்கு மாகாண சபையை நிராகரித்து மத்திய அரசாங்கம் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதை வடமாகாண சபை உறுப்பினர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வட மாகாண சபையின் 57 ஆவது அமர்வு நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற போது அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே வடமாகாண சபை முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 5 ஆம் திகதி மத்திய அரசாங்கத்தின் அமைச்சரவைக் கூட்டத்தில் ரிஷாட் பதியுதீன், மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தபா, அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் ஆகிய அமைச்சர்களைக் கொண்ட ஒரு செயலணி நியமிக்கப்பட்டது.

குறித்த செயலணியில் மத்திய அரசாங்க அலுவலர்கள் ஆறு பேரும் வட மாகாண பிரதம செயலாளரும் வடமேல் மாகாண பிரதம செயலாளரும் அங்கம் வகிக்க வேண்டும் என்றும் முடிவு எடுத்துள்ளனர்.

குறித்த செயலணியின் மீள்குடியேற்றம் பற்றிய நிகழ்ச்சி நிரலில் பாரம்பரிய சிங்கள கிராமங்களும் உள்ளடக்க வேண்டும் என்றும் திருகோணமலை மாவட்டமும் அதில் உள்ளடக்கப்பட வேண்டும் என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த செயலணியில் மாவட்டச் செயலர்களை உள்ளீர்ப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

வட மாகாணத்தில் இடம்பெயர்ந்த மக்கள் மாத்திரமல்ல இந்தியாவில் இருந்து வருபவர்களையும் அவர்களின் பாரம்பரிய இடங்களில் குடியமர்த்தாது தான்தோன்றித்தனமாக மத்திய அரசாங்கத்திற்கு உகந்த முறையில் அவர்களைக் குடியமர்த்தக்கூடிய ஒரு சந்தர்ப்பம் இந்தக் காரியத்தால் உருவாகியுள்ளது.

பெயருக்கு வட மாகாணசபை பிரதம செயலாளரை உள்ளடக்கி, மத்திய அரசாங்கமே இவ்வாறான காரியங்களைக் முன்னெடுத்து செல்ல உத்தேசித்துள்ளது.

இந்த விடயம் வட மாகாண மக்களின் கருத்துக்களை உதாசீனம் செய்வதற்கு ஒப்பாகும். தம்மிடம் கேட்காமல் தமிழ் மக்களின் மீள்குடியேற்றம் நடைபெறுவது பொது மக்களுக்குப் பல பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது.

மத்திய அரசாங்கத்தின் உதாசீனமும், தான்தோன்றித்தனமும் கண்டனத்திற்கு உரியது. இன்று சர்வதேச மட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் சம்பந்தமாகப் பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

முக்கியமாக பின்ஹெய்ரோ கோட்பாடுகளின் படி வெவ்வேறு காரணங்களினால் இடம்பெயர்ந்த மக்கள் தமது முன்னைய பாரம்பரிய இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மறுபக்கத்தில் மத்தியின் அதிகாரத்தை நிலைநாட்டுவதே குறிக்கோளாக இருந்து வருகின்றது.

செயலணியில் யார் யார் இடம்பெற வேண்டும் என்பதை விட மத்திய அரசாங்கம் செயலணியை உருவாக்க முன்னர் வடமாகாண சபையுடன் கலந்தாலோசித்து இருக்க வேண்டும் என்றும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts