நில ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டம் என்ற பெயரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ்த் தேசிய விடுதலை முன்னணியும் நடத்த ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்துக்கு தடையுத்தரவு விதித்த நீதிமன்றத் தீர்ப்பில் திருத்தம் செய்யவேண்டும் என்று கூட்டமைப்பு மற்றும் விடுதலை முன்னணி சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்த நீதிபதி கணேசராஜா, தடையுத்தரவு சரியானதே என்று புதன்கிழமை தீர்ப்பளித்திருந்தார்
இந்நிலையில் உதயன் பத்திரிகை, “நாடாளுமன்றத்தில் கூறப்படும் விடயங்களை விமர்சிக்க நீதிமன்றுக்கு அதிகாரமில்லை” என்று பாராளுமன்ற உறுப்பினர் ஏ.சுமந்திரனை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டிருந்தது.இந்தச் செய்தியில், நீதிபதி கணேசராஜா சுமந்திரனிடம் மன்னிப்புக்கோரியதாக உண்மைக்குப் புறம்பான தகவலை வெளியிட்டு, நீதிமன்றத்தையும், நீதிபதியையும் அபகீர்த்திக்குள்ளாக்கியதுடன், மக்கள் மத்தியில் மன்றையும், நீதிபதியையும் மதிப்பிறக்கம் செய்திருப்பதாகக் குற்றஞ்சாட்டி உதயன் ஆசிரியரை மன்றுக்கு சமுகமளிக்குமாறு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்திருந்தது.
இதனையடுத்து, சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கத்துடன் நீதிமன்றுக்கு சமுகமளித்த உதயன் ஆசிரிய பீடத்தைச் சேர்ந்த திரு.பிறேமானந்த், தமக்கு இந்தத் தகவலை வழங்கியது சுமந்திரன் தான் என்று மன்றில் தெரிவித்தார்.எனினும், அப்படியானால், அது உண்மை தானா என்று நீதிபதியிடமோ அன்றி நீதிமன்றப் பதிவாளரிடமோ சரிபார்த்திருக்கவேண்டியது ஒரு பத்திரிகையாசிரியரின் கடமை என்று சட்டத்தரணிகள் சார்பாக இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
உதயன் பத்திரிகையில் முன் பக்கத்தில் எவ்வித நிபந்தனையுமற்ற விதத்தில் வாசகர்களிடமும், நீதிமன்றத்திடமும், சட்டத்தரணிகளிடமும் மன்னிப்புக்கோரி செய்தி வெளியிடப்படவேண்டும் என்றும் மன்றில் உதயன் ஆசிரியபீடத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக உதயன் ஆசிரியர் பீடத்துக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சட்டத்தரணிகள் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.இதுதொடர்பாக விளக்கமளிப்பதற்கு கால அவகாசம் வழங்கவேண்டும் என்று உதயன் பத்திரிகை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, நீதிமன்றத்தை இவ்வாறு அவமதித்த குற்றத்துக்காக ஏன் பத்திரிகை்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கக்கூடாது என எதிர்வரும் 7ம் திகதி மன்றில் சமுகமளித்து விளக்கவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கில் உதயன் சார்பாக சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கமும், சட்டத்தரணிகள் சார்பாக சட்டத்தரணி ரெங்கன் தலைமையில், சட்டத்தரணிகளான றெமீடியஸ், வரதராஜா, விக்னராஜா, சிவலிங்கம், சர்மிலி உள்ளிட்ட சுமார் 9 சட்டத்தரணிகளும் மன்றில் வாதிட்டனர்.உதயன் பத்திரிகை நிறுவத்தின் நிர்வாகப் பணிப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சரவணபவனும் இந்த வேளை நீதமன்றுக்கு சமுகமளித்திருந்தார்.