வடக்கு மாகாண சபைத் தேர்தல் அடுத்த வருடம் செப்ரெம்பர் மாதம் நடத்தப்படுமென்று அரசு நேற்று தெரிவித்திருக்கிறது.
நேற்றுக்காலை இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனைச் சந்தித்தபோது, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்க்ஷ, அரசின் இந்தத் தீர்மானத்தை அறிவித்திருக்கிறார்.சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, வடக்கின் புனர்வாழ்வு, புனரமைப்பு, இந்திய வீடமைப்புத் திட்டம், இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை உட்பட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாகப் பேசப்பட்டுள்ளன.
வடமாகாண சபைக்கான தேர்தலை அடுத்த வருடம் செப்டெம்பரில் நடத்துவதற்கு அரசு உத்தேசித்துள்ளதென்றும், அதற்கு முன்னர் வாக்காளர் பட்டியல் சீராக்கல், கிரமமான மீள்குடியேற்றம், சுதந்திரமாக மக்கள் இயங்கக்கூடிய நிலைமை என்பவற்றை அரசால் உறுதிப் படுத்த வேண்டிய தேவை இருப்பதையும் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ சிவ்சங்கர் மேனனிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிரந்தர அரசியல் தீர்வொன்றுக்கான முயற்சிகள் பலவீனமடைந்திருப்பது குறித்து இங்கு இந்தியா தரப்பில் மேனன் கவலை தெரிவித்திருக்கிறார். எவ்வாறாயினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வரச்செய்து இணக்கமான தீர்வொன்றை நோக்கிச் செல்வதற்கு இந்தியா கூட்டமைப்பினருக்கு அழுத்தங்கள் வழங்க வேண்டுமென இங்கு மேனனிடம், அமைச்சர் பஸில் கோரிக்கை விடுத்திருக்கிறார்.