மகனை பாடசாலைக்கு அனுப்பாத தாய்க்கு விளக்கமறியல்

கிளிநொச்சி சிவபுரம் பகுதியில் தனது மகனை கடந்த ஒருவருடமாக பாடசாலைக்கு அனுப்பாத தாயை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் 14 நாள் விளக்க மறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது மாவட்டச் செயலகம், சிறுவர் நன்நடத்தை அலுவலகம், பிரதேச செயலகம், நீதிமன்றம் என்பன இணைந்து தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களில் பாடசாலை நாட்களில் திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு பாடசாலைக்கு செல்லாத சிறுவர்களை பிடித்து நீதிமன்றில் முற்படுத்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக சாந்தபுரம், பொன்னகர், செல்வபுரம். போன்ற பல்வேறு இடங்களுக்கு பொலீஸாருடன் சென்ற மேற்படி குழவினர் பாடசாலை செல்லா சிறுவர்களை பிடித்து நீதி மன்றில் முற்படுத்தினார்கள்.

இதில் சில சிறுவர்கள் யாழ் அச்சுவேலி சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும், சிலர் சிறுவர் இல்லங்களிலும், ஏனையவர்கள் பெற்றோர்களுக்கான கடும் எச்சரிகையுடன் பெற்றோர்களுடனும் அனுப்பிவைக்கப்பட்டனர்.

அவ்வாறே வியாழக்கிழமை 14-07-2016 பரந்தன் சிவபும் பகுதிக்குச் சென்ற மேற்படி குழுவினர் அங்கு பாடசாலைக்கு செல்லா 16 சிறுவர்களை பிடித்து நீதிமன்றில் முற்படுத்தினார்கள். இவர்களில் நான்கு சிறுவர்கள் அச்சுவேலி சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும், ஏழு சிறுவர்கள் சிறுவர் இல்லத்திலும், ஏனையவர்கள் எச்சரிகையுடன் பெற்றோர்களுடன் வீடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதன் போதே தனது ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகனை பாடசாலைக்கு ஒரு வருடமாக அனுப்பாத தாயை 14 நாட்களுக்க விளக்கமறியலில் வைக்குமாறு நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்தோடு 7 பிள்ளைகளின் தந்தை ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளை ஒழுங்காக பாடசாலைக்கு அனுப்பாது துன்புறுத்தியதோடு, மதுபோதையில் அவதானிக்கப்பட்டு எச்சரிக்கையுடன் பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிளிநொச்சியில் பாடசாலைக்க செல்லாத சிறுவர்களை இலக்கு வைத்து நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என மாவட்ட சிறுவர் நல அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Related Posts