பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டம் இன்றைய தினமும் தொடர்வதாக பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக் குழு கூறியுள்ளது.
தமது கோரிக்கைகளுக்கு இதுவரை நியாயமான தீர்வுகள் கிடைக்கவில்லை என்று அதன் இணைத் தலைவர் எட்வர்ட் மல்வத்தகே கூறுகின்றார்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.
எவ்வாறாயினும், உயர் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்கலைக்கழகங்களில் தற்போது நிலவுகின்ற பிரதான பிரச்சினைகள் குறித்து தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதிநிதிகளுடன் பேசி இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
எனினும் தமது சங்கத்தின் எந்தவொரு பிரதிநிதியும் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்கவில்லை என்று எட்வர்ட் மல்வத்தகே கூறுகின்றார்.
ஆகையால் இன்றைய தினமும் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதாகவும், தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் எதிர்வரும் 27ம் திகதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் எட்வர்ட் மல்வத்தகே மேலும் கூறினார்.