காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம கொத்துக்குண்டு பாவனையை நியாயப்படுத்தி வெளியிட்டுள்ள அறிக்கையால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், தனது கருத்தை நியாயப்படுத்தி மீண்டுமொரு அறிக்கையை அவர் நேற்று வெளியிட்டுள்ளார்.
2010 ஓகஸ்ட் முதலாம் திகதிக்கு முன்னர் இலங்கை படையினர் கொத்துக்குண்டுகளை பாவித்திருந்தால் அது தவறானதல்ல என்பதே அவரது வாதமாகும்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
“2008 ஆம் ஆண்டு மே 30 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட கொத்துக்குண்டுகளை தடைசெய்யும் சர்வதேச உடன்படிக்கையில் இலங்கை அப்போது கைச்சாத்திடவில்லை.
குறிப்பிட்ட உடன்படிக்கை சர்வதேச அளவில் 2010 ஆகஸ்ட் மாதமே நடைமுறைக்கு வந்தது. இதன் காரணமாக குறிப்பிட்ட காலப்பகுதிக்கு முன்னர் இலங்கை கொத்துக்குண்டுகளை பயன்படுத்தியிருந்தால் அதனை சட்டவிரோதமானது எனத் தெரிவிக்கமுடியாது.
இலங்கையைத் தவிர 70 நாடுகள் அந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடவில்லை. கொத்துக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டதை நாங்கள் எந்தத் தருணத்திலும் நியாயப்படுத்த முயலவில்லை. மாறாக இலங்கையில் உள்நாட்டு மோதல் இடம்பெற்றவேளை காணப்பட்ட சட்டங்கள் குறித்தே சுட்டிக்காட்ட முயன்றுள்ளோம்.
இலங்கை இராணுவம் தாம் கொத்துக்குண்டுகளை பயன்படுத்தியதை உறுதியாக நிராகரித்துள்ளது. எனினும், கொத்துக்குண்டுகள் பயன்படுத்தப்பட்மை தொடர்பில் புதிய ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றால், யார் அவற்றை பயன்படுத்தியது மற்றும் சர்வதே மனிதாபிமான சட்டங்களின் அடிப்படை கொள்கைகளுக்கு முரணற்றதாக காணப்படுகின்றதா போன்ற விசாரணைகளை விசாரணை அதிகாரிகளே மேற்கொள்ளவேண்டும்” என்றுள்ளது.
இதேவேளை, முன்னதாக இப்படியொரு கருத்தை பரணகம வெளியிட்டபோது, அது அவரின் மேதாவித்தனம் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கடுமையாகச் சாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.