ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வருமான நாமல் ராஜபக்ஷவின் கைதானது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையென மஹிந்த ஆதரவு அணி முன்வைக்கும் குற்றச்சாட்டை அரசு நிராகரித்தது.
6 மாதங்கள் விசாரணை நடத்தப்பட்ட பின்னர், உரிய நெறிமுறைகளுக்கு அமையவே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பிரதி அமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், மேலும் கூறியவை வருமாறு:-
“நாமலின் கைதால் அரசு சந்தோஷமடைகிறதா என மஹிந்த ராஜபக்ஷ கேட்கின்றார். கைதுக்கும் அரசுக்குமிடையில் எவ்வித தொடர்புமில்லை. சட்டம் தனது கடமையை சரிவர செய்துள்ளது. எனவே, நாட்டில் தற்போது சட்டத்தின் ஆட்சி இடம்பெறுவதையிட்டே அரசு மகிழ்ச்சியடைகின்றது.
நாமல் ராஜபக்ஷ ஏன் கைதுசெய்யப்பட்டார் என பலருக்கு உரிய விளக்கமில்லாமல் இருப்பதால், இது பற்றி பலகோணங்களில் கதைகட்டப்படுகின்றது. ஆகவே, அது பற்றி மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டியுள்ளது.
ஊழல் எதிர்ப்புக் குழுவின் ஏற்பாட்டாளரும் ஜே.வி.பியின் மாகாண சபை உறுப்பினருமான வசந்த சமரசிங்கவே நாமல் எம்.பிக்கு எதிராக கடந்த டிசம்பரில் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்தார். இது அரசால் செய்யப்பட்ட முறைப்பாடு அல்ல.
கிரிஷ் என்ற நிறுவன கட்டடத்திற்காக 70 மில்லியன் ரூபா பணத்தை நிமல் பெரேரா என்ற நபரின் வங்கிக்கணக்கில் வைப்பிலிடுமாறு நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து வைப்பிலிடப்பட்ட பணத்தை அவர் நாமல் பெரேராவிடமிருந்து பெற்றுக்கொண்டுள்ளார். அந்தப் பணத்திற்கு என்ன நடந்தது என தெரியவில்லை.
எனினும், 2013 ஒக்டோபரில் நடைபெற்ற சுப்பர் ரக்பி போட்டிக்காக அதை பயன்படுத்தியதாக நாமல் கூறியுள்ளார். ஆனால், அதற்கான ஆதரங்கள் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை.
இதனாலேயே அவர் கைதுசெய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதன்படி சட்டமா அதிபர் அவருக்கு எதிரான குற்றப்பத்திரத்தை சமர்ப்பிப்பார். அதன்படி வழக்கு விசாரணைகள் நடக்கும். இங்கு அரசு எந்தவகையிலும் இதில் தலையிடாது. நீதித்துறை சுயாதீனமாக இயங்குகின்றது. பி அறிக்கையில் எல்லா விடயங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. நாமல் கைதுசெய்யப்படுவார் என அரச தரப்பிலிருந்த எவரும் பெயர் குறிப்பிட்டு முன்கூட்டியே சொல்லவில்லை. அத்துடன், 6 மாதங்கள் விசாரணையின் பின்னரே கைது இடம்பெற்றுள்ளது. இதை குறுகிய கால நடவடிக்கை என்றும் குறிப்பிட முடியாது” – என்றார் பிரதி அமைச்சர் அஜித் பி.பெரேரா.