இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தில் ஒரு பக்குவமான படித்த முஸ்லிம் நபரை எமது முதலமைச்சராக ஏற்றுக்கொள்வதற்கு நாம் தயாராகவிருக்கின்றோம் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான ஆர்.சம்பந்தன் தெரிவித்தார்.
தமிழ் பேசும் மக்களின் பெரும்பான்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதாலேயே வடக்கு கிழக்கு இணைந்திருக்க வேண்டுமென திடமாக வலியுறுத்தி வருகின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனை முஸ்லிம் தலைவர்களும் மக்களும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றுமுன்தினம் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
எமக்கு எதிராக எமது போராட்டங்களுக்கு எதிரான பல அநீதிகள் இழைக்கப்பட்டுள்ளன. பிரஜாவுரிமைச் சட்டம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டதையடுத்து தமிழ் மக்களின் அரசியல் பலம் குறைக்கப்பட்டது.
நாடு சுதந்திரமடைந்த போது தமிழுக்கும் சிங்களத்திற்கும் சம உரிமை கொடுக்கப்படுமென ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால் பின்னர் தனிச்சிங்களம் சட்டம் 1956ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
பெரும்பான்மை இனம் தமிழ் பேசும் இனங்களின் பிரதேசங்களில் குடியேற்றப்பட்டார்கள். விசேடமாக கிழக்கு மாகாணத்தில் குடியேற்றங்கள் மிகவும் தீவிரமாக இடம்பெற்றிருந்தன.
எமது நாட்டில் 1947 ஆம் ஆண்டுக்கும் 1981ஆம் ஆண்டுக்குமிடையிலான காலப்பகுதியில் சிங்கள மக்களின் இயற்கை ரீதியான அதிகரிப்பு 2.5 வீதமாகும். இக்காலத்தில் கிழக்கு மாகாணத்தில் சிங்கள மக்களின் இயற்கை ரீதியான அதிகரிப்பு 9 வீதமாகும். தற்போது வடமாகாணத்திலும் அவ்விதமான நிகழ்வுகளை நிறைவேற்றுவதற்கு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.
இக்காரணத்தின் நிமித்தம் தான் வடக்கு கிழக்கு இணைந்திருக்க வேண்டும்.
தமிழ் பேசும் மக்களின் பெரும்பான்மை பாதுகாக்கப்படவேண்டும் என்பதை திடமாக வலியுறுத்தி வருகின்றோம். இதனை முஸ்லிம் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். முஸ்லிம் தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
ஒரு தமிழர் தான் முதலமைச்சராக இருக்க வேண்டுமென்ற காரணத்திற்காக நாம் அவ்வாறு செய்யவில்லை.
ஒரு பக்குவமான படித்த முஸ்லிம் நபரை எமது முதலமைச்சராக ஏற்றுக்கொள்வதற்கு நாம் எப்போம் தயாராகவிருக்கின்றோம். எமது பெரும்பான்மை பாதுகாக்கப்படுவது சந்தேகத்துக்கு இடமின்றி உறுதிப்படுத்துவதாக இருந்தால் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படவேண்டும்.
அதனை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்பதை அன்பாகவும் தாழ்மையாகவும் கேட்டுக்கொள்ள விரும்புகின்றோம்.
தற்போது பாராளுமன்றம் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டுள்ளது. வழிநடத்தும் குழு நிர்ணயிக்கப்பட்டு ஒழுங்காக கூடி செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.
புதிய அரசியல் சாசனம் இந்த நாட்டிற்கு அவசியமாகவுள்ளது.
புதிய அரசியல் சாசனமானது தமிழ் மக்களுக்கு மட்டுமானதல்ல. அனைத்து மக்களுக்கும் முக்கியமானது.
அதற்காக அனைவரும் முயற்சிக்கின்றார்கள். புதிய அரசியல் சாசனத்தின் ஊடாகவே தற்போதுள்ள நிலையிலிருந்து நாட்டை மீட்க முடியும் என்றார்.