பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பகிஷ்கரிப்பு தொடர்பாக உயர்கல்வி அமைச்சு, திறைசேரி மற்றும் சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கிடையிலான கலந்துரையாடல்களுக்கு அவசர தேவை உள்ளது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு தொடர்ச்சியான பேச்சுவார்த்தை அவசியம் எனவும் கல்விசாரா ஊழியர்களுடனான சந்திப்பில் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ கூறினார்.
இவ்விடயத்தில் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தலையிட வேண்டுமென பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக் குழு கோரிக்கை விடுத்தது. மூன்றாவது வாராமாக தொடரும் கல்விசார ஊழியர்களின் பகிஷ்கரிப்பினால் பல்கலைக்கழக செயற்பாடுகள் முடங்கியுள்ளன. தமது சம்பளப் பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால் பகிஷ்கரிப்பை தொடரப்போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
கடந்த பெப்ரவரி மாதம் அமுல்படுத்துவதற்கு உயர்கல்வி அமைச்சு இணங்கிய யோசனைகள் அமுல்படுத்தப்பட்டால் பகிஷ்கரிப்பை கைவிடத் தயார் என மேற்படி தொழிற்சங்க கூட்டுக் குழுவின் பேச்சாளர் விஜயதிலக்க ஜயசிங்க கூறினார்.
தமது சம்பள உயர்வுப் பிரச்சினை குறித்து நேற்றைய தினம் (25) அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்துள்ளதாக சம்மேளனத்தின் தலைவர் ஆர்.எம்.சந்திரபால தெரிவித்துள்ளார்.
சம்பள உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் கடந்த 6ம் திகதி தொடக்கம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமது கோரிக்கையை வலியுறுத்தி கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் ஆர்ப்பாட்டமும் செய்தனர்.
இந்த நிலையில் இப்பிரச்சினை குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, உயர்கல்வி அமைச்சு ஆகியவற்றின் பங்களிப்பில் தொழில் ஆணையாளரது மத்தியஸ்தத்தில் இன்றைய தினமும் (26) பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளதாக ஆர்.எம்.சந்திரபால குறிப்பிட்டார்.