அமெரிக்காவின் போர்ட் வொர்த் நகரில் உள்ள மாவட்ட நீதிமன்ற கட்டிடத்தில் இயங்கி வரும் அந்த சிறையில் 8 கைதிகள் அடைக்கப்பட்டுயிருந்தனர்.
இந்த சிறைக்கு ஒரே ஒரு காவலர் பணியில் இருந்து வந்துள்ளார். அவர் இன்று நாற்காலி ஒன்றில் அமர்ந்திருந்தபடி கைதிகளிடம் நகைச்சுவை செய்து கொண்டும் பேசி கொண்டும் இருந்துள்ளார். இந்நிலையில் அவர் நெஞ்சு வலியினால் திடீரென சரிந்து விழுந்துள்ளார். கைதிகள் கூச்சலிட்டு உதவிக்கு அழைத்துள்ளனர். ஆனால் அங்கு ஒருவரும் இல்லை.
அதேவேளையில், கைதிகளில் ஒருவர் சிறையின் கதவை உடைத்து திறந்து உள்ளார். கைதிகள் அனைவரும் வெளியே வந்து கீழே கிடந்த சிறை காவலரை நெருங்கியுள்ளனர். கைதிகள் உதவி கேட்டு சத்தம் போட்டும் கதவுகளை கடுமையாக அடித்தும் சிறைக்கு மேலே உள்ளவர்களை கீழே கொண்டு வருவதற்கு முயற்சி செய்துள்ளனர்.
மேலே நீதிமன்றத்தில் இருந்தவர்கள் கைதிகளுக்குள் சண்டை என கருதி சத்தம் கேட்டு கீழே வந்துள்ளனர். இறுதியில் அதிகாரிகள் வந்தவுடன், கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டனர். அவசர சிகிச்சை பிரிவினர் வந்து சுவாசம் இன்றி கிடந்த காவலருக்கு சிகிச்சை அளித்தனர்.
காவலரின் கையில் துப்பாக்கி இருக்கும் என்ற நினைவோ உதவி செய்யாமல் இருந்து விடலாம் என்றோ நினைக்கவேயில்லை. அவர் கீழே விழுந்தவுடன் உதவிக்கு சென்றேன் என கைதி நிக் கெல்டன் கூறியுள்ளார். கைதிகளின் இந்த செயலால் காவலரின் உயிர் காப்பாற்றப்பட்டு உள்ளது. கைதிகள் சிறையினை உடைத்து நல்ல விசயத்திற்காக வெளியே வந்ததை அடுத்து சிறையின் பூட்டுகள் வலுப்படுத்தப்பட்டு உள்ளன என தகவல் தெரிவிக்கின்றது.