ஊடகங்களின் பொறுப்பு, நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நன்மை செய்வதே தவிர அவர்களை வழிகெடுப்பது அல்ல என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
பேராதனை ஸ்ரீ சுபோதிராம விகாரையில், நேற்று (09) பிற்பகல் இடம்பெற்ற புண்ணிய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘இன்னும் இரு வாரங்களுள் யுத்த நீதிமன்றம் வெளிநாட்டு நீதிபதிகளும் வருகை தரவுள்ளனர்’ என்பதாக, உள்நாட்டு ஞாயிறு வார இறுதிப் பத்திரிகை ஒன்றில் வெளியாகிய தலைப்பு தொடர்பாக கவலை வெளியிட்ட ஜனாதிபதி, நாட்டை திசைதிருப்பும் இவ்வாறான பொய்ப் பிரசாரங்களை தான் வன்மையாக நிராகரிப்பதாகக் குறிப்பிட்டார்.
ஊடகங்களின் பொறுப்பு, நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நன்மை செய்வதே தவிர அவர்களை வழிகெடுப்பது அல்ல என வலியுறுத்திய ஜனாதிபதி, இன்று சிலசமயங்களில் நாட்டில் தொழிற்படும் ஊடகங்களின் செயற்பாடுகள் தனக்கு மிகுந்த கவலையளிப்பதாகத் தெரிவித்தார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கை சார்பாக வெளியிட்டுள்ள யோசனைகளில் யுத்த நீதிமன்றம் தொடர்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லையெனவும் நாட்டின் சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் மனிதாபிமான உரிமைகள் பற்றிக் கவனம் செலுத்துமாறு மாத்திரம் அதன் மூலம் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
26 ஆண்டுக காலமாக அநீதிக்கு உள்ளாக்கப்பட்ட வடக்கு மக்களின் பிரச்சினைளைத் தீர்த்து வைப்பதற்காக, சுதந்திரத்தின் பின்னர் எந்தவோர் அரசாங்கமும் மேற்கொள்ளாத ஒரு பணியினைத் தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக கூறினார். நாட்டில் சமத்துவம் மற்றும் சகவாழ்வினை ஏற்படுத்தி நீதியான ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் இவ் வேலைத்திட்டத்தினை, இன்று ஒருசிலர் விமர்சிப்பதாகத் தெரிவித்தார்.
பௌத்த மதத்தை போசிப்பதற்கும் நாம் உலகமக்களுக்கு வழங்க கூடிய மிகப்பெறுமதி வாய்ந்த தேரவாத பௌத்த சிந்தனையை பரப்புவதற்காகவும் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் தான் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதாக தெரிவித்த அவர், சர்வதேச பௌத்த பிரசார நடவடிக்கைகளுக்காக புதியதொரு வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு முப்பீடங்களைச் சேர்ந்த மகாசங்கத்தினரது அறிவுறுத்தல்கள், ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களின் கீழ் நடவடிக்கை மேற்கொள்வதாகத் தெரிவித்தார்.
பேராதனை ஸ்ரீ சுபோதிராம விகாரையில் இடம்பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மூன்றாம் நிலை திரிபீடக சத்தர்ம சஜ்ஜாயனாவின் பூர்த்தி புண்ணியோத்சவம் மற்றும் சங்கைக்குரிய ஸ்ரீ தம்மாவாபிதான நாயக்க தேரரின் பிறந்த தின புண்ணியோத்சவ நிகழ்வு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெற்றது.