விரும்பிய இடத்தில் பஸ்சை நிறுத்தாத நடத்துநரை பயணி ஒருவர் கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், புத்தூரிலிருந்து, சென்னை கோயம்பேட்டுக்கு வந்த அரசு பஸ்சில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த பஸ்சின் நடத்துனராக, திருத்தணி அருகே உள்ள செறுக்கலூர் கிராமத்தை சேர்ந்த செல்வம் ( 46) பணியில் இருந்துள்ளார்.
நடத்துநரின் ஊரை சேர்ந்த மாற்றுத் திறனாளி தாமோதரன் மற்றும் அவரது மனைவி இருவரும் அந்த பஸ்சில் பயணித்துள்ளனர். தாமோதரன் மனைவி ஊத்துக்கோட்டை செக்போஸ்ட் பகுதியில் உள்ள ஹோட்டலில் வேலை செய்து வருகிறார். எனவே, ஊத்துக்கோட்டை செக்போஸ்ட் அருகே பஸ் வந்ததும் தாமோதரன் வண்டியை நிறுத்த சொன்னார்.
அங்கு பஸ் நிறுத்தம் இல்லாததால் பஸ்சை நிறுத்த முடியாது என்று செல்வம் கூறிவிட்டார். இதையடுத்து பஸ் ஊத்துக்கோட்டை பஸ் நிலையம் வந்தடைந்தது. ஆத்திரத்தில் இருந்த தாமோதரன் அருகே உள்ள காய்கறி கடையில் கத்தியை எடுத்து வந்து டீ குடித்துக் கொண்டிருந்த செல்வத்தின் கழுத்தை அறுத்துள்ளார்.
படுகாயம் அடைந்த செல்வம் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஊத்துக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீஸ் வழக்குப்பதிவு செய்து மாற்றுத்திறனாளி தாமோதரனை கைது செய்தார்.