கல்குடா காவல்துறைப் பிரிவில் தமிழர் ஒருவர் சிங்கள இனத்தவர்களால் தலையில் பலமாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதையடுத்து கல்குடா பகுதியில் பதற்ற நிலை நிலவுவதாகத் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் நேற்று அதிகாலை நடைபெற்றுள்ளது. கல்குடா பிரதான வீதியைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை தங்கராசா வயது (51) என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
குறித்த நபர் மேலும் இருவருடன் சேர்ந்து கடையில் பொருட்கள் வாங்கிச் செல்கையில், வீதியில் குடித்துவிட்டு நின்ற பெரும்பான்மையினத்தவருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியதையடுத்து குறித்த நபரைத் தலையில் பலமாகத் தாக்கி கொலை செய்துள்ளனர்.
மேற்படி சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இதுவரை 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ள தாகவும் சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், ஏனையவர்களைக் கைதுசெய்வதற்கு காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
பாசிக்குடா சுற்றுலா விடுதிகளில் வேலைசெய்வதற்காக பல பெரும்பான்மை சிங்கள இனத்தவர்கள் கல்குடா பகுதியில் வாடகைக்கு வீடெடுத்துத் தங்கியுள்ளனர். இதேபோன்றே குறித்த நபர்களும் வீடொன்றில் தங்கியிருந்தவர்களாவர்.
எதிர்வரும் 10ஆம் திகதி பாசிக்குடாவில் சுற்றுலா விடுதி ஒன்றினைத் திறப்பதற்கு சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வருகைதரவுள்ள நிலையிலேயே மேற்படி சம்பவம் நடைபெற்றுள்ளது.