யாழ். நீதிவான் நீதிமன்றக் கட்டளையைக் வீதியில் கிழித்து எறிந்து, நீதிமன்றத்தை அவமதிப்புக்கு உள்ளாக்கிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோ அரசியல் பிரிவுத் தலைவருமான சிவாஜிலிங்கத்திற்கு எதிராக யாழ்.நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா இன்று சனிக்கிழமை தெரிவித்தார்.யாழ். பொலிஸ் நிலையத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாடு முடிந்த பின்னர் ஊடகவியலாளரிடம் யாழ்.பொலிஸ் நிலைய தலைமைப் பெறுப்பதிகாரி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,
“நிலம் சுவீகரிப்பு தொடர்பாக கடந்த 18 ஆம் திகதி தமிழ் தேசிய மக்கள் முன்னணி யாழ்.பஸ் நிலையத்திற்கு அருகில் நடைபெற ஏற்பாடாகியிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றத் தடை உத்தரவு வழங்கப்பட்டு இருந்தது
இந்த நீதிமன்ற தடை உத்தரவு தாங்கிய கடிதத்தை வீதியில் வைத்து மாவை சேனாதிராசா மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோர் வாசித்தனர். அதன் பின்பு தங்களைக் கைது செய்தாலும் பரவாயில்லை இது தான் இந்த அரசுக்கு தாம் சொல்லிவைக்கும் இறுதிச் சந்தர்ப்பம் எனக் கூறி நீதிமன்றக் கட்டளையை சிவாஜிலிங்கம் கிழித்து எறிந்துள்ளார்” என்றார்.
இச் சம்பவம் தொடர்பாக சிவாஜிலிங்கத்திடம் தொடர்பு கொண்டு கேட்டபோது எந்த வழக்கையும் எதிர்கொள்வதற்கு தான் தயாராக இருப்பதாக தெரிவித்தார். தனது சட்டத்தரணியுடன் இந்த விடயம் தொடர்பாக தான் ஆராய்ந்துள்ளதாக அவர் கூறினார்.