11 வயது மாணவி மாயம்; பெற்றோர் பரிதவிப்பு

இரத்தினபுரி, நிவித்திகலை சிதுறுபிட்டியவில், 50 வயதுடைய நபரினால் கடத்திச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் 11 வயது மாணவியான எஸ்.சரோஜினியைக் கண்டறிய, துரித நடவடிக்கைகளைப் பொலிஸார் மேற்கொள்ள வேண்டும் என, தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், இரத்தினபுரி மாவட்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Student-girl

இ/நிவி/தேலை தமிழ் ஆரம்ப பாடசாலையில், தரம் 4 இல் கல்விப் பயின்று வரும் மேற்படி மாணவி, திங்கட்கிழமை (4), பாடசாலை முடிந்து வீடு திரும்பும் வழியில் காணாமல் போயுள்ளதாக பொலிஸில் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.

சிதறுப்பிட்டியவிலுள்ள தோட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக தங்கியிருந்து பணிப்புரிந்ததாகக் கூறப்படும் 50 வயது நபரே தனது மகளை கடத்திச் சென்றுள்ளதாக பெற்றோர், பொலிஸ் முறைப்பாடு செய்துள்ளனர். காணாமல் போன மாணவியின் தந்தை அணிந்திருந்த மேற்சட்டையை அணிந்துகொண்டு பாடசாலைக்கு சென்ற மேற்படி நபர், சரோஜினியின் பாட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சரோஜனியை அவரது தாய் அழைத்துவரக் கூறியதாகவும் பாடசாலையின் ஆசிரியர்களிடம் கூறியுள்ளார். எனினும், மாணவியின் பெற்றோர் வந்தால் மட்டுமே மாணவியை அனுப்பவோம் எனக் கூறி ஆசிரியர்கள் அந்நபருடன் சரோஜினியை அனுப்ப மறுத்துள்ளனர்.

பாடசாலை முடியும் வரை வழியில் காத்திருந்த நபர், பாடசாலை முடிந்த பிறகு சரோஜினியுடன் சேர்த்து அவரது நண்பிகள் இருவரையும் அழைத்துக்கொண்டு இரத்தினபுரிக்குச் சென்றுள்ளார். எனினும், சரோஜினியின் நண்பிகள் இருவரையும் பஸ்தரிப்பிடத்திலே விட்டுவிட்டு சரோஜினியை மட்டும் அழைத்துகொண்டு அந்நபர் சென்றுள்ளார்.

இரத்தினபுரி பஸ் தரிப்பிடத்தில் அநாதரவாக நின்றுகொண்டிருந்த இரு மாணவிகள் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பஸ்தரிப்பிடத்துக்கு வந்த பொலிஸார், அம்மாணவிகளின் புத்தகத்தில் எழுதியிருந்த ஆசிரியர் ஒருவரின் அலைபேசி இலக்கத்துக்கு தொடர்புகொண்டு மாணவிகள் விவகாரம் தொடர்பில் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்ட மாணவிகள் இருவரும் பின்னர் வைத்திய பரிசோதனைக்காக இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இம்மாணவியை காண்பவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் அறிவிக்குமாறு தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related Posts