Ad Widget

விஷால், கார்த்தி நடிக்கும் புதிய படம்

நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக சென்னை தியாகராய நகர் ஹபிபுல்லா சாலையில் உள்ள 19 கிரவுண்ட் நிலத்தில் புதிய கட்டிடம் கட்டுவதாக நாசர், விஷால், கார்த்தி, பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் வாக்குறுதி அளித்து பொறுப்புக்கு வந்தனர். அந்த இடத்தில் 5 மாடி கட்டிடம் கட்டப்படும் என்றும், அதில் 1,000 பேர் அமரும் அரங்கம், கல்யாண மண்டபம், பிரிவியூ தியேட்டர், கருத்தரங்க கூடம், உடற்பயிற்சி கூடம், நடன பயிற்சி கூடம், சங்க அலுவலகம் போன்றவை அமைக்கப்படும் என்றும் அறிவித்தனர்.

Vishal-Karth

இதற்காக ரூ.29 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டது. நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தி ரூ.9 கோடி நிதி திரட்டினார்கள். மீதி தொகையை பிரபல நடிகர்களை ஒரு புதிய படத்தில் சம்பளம் வாங்காமல் நடிக்க வைத்து அதன் மூலம் திரட்ட முடிவு செய்யப்பட்டது. தற்போது நடிகர் சங்கத்துக்கான படம் தயாரிக்கும் பணிகள் தொடங்கி உள்ளன. இரண்டு படங்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

முதல் படத்தில் விஷாலும், கார்த்தியும் இணைந்து நடிக்கிறார்கள். இரண்டாவது படத்தில் ஜெயம்ரவியும், ஆர்யாவும் நடிக்கின்றனர். விஷால், கார்த்தி நடிக்கும் படத்துக்காக 3 இயக்குனர்களிடம் கதை கேட்கப்பட்டு உள்ளது. இரண்டு கதாநாயகர்களை கொண்ட அதிரடி கதையம்சத்தில் அந்த படங்களின் கதையை இயக்குனர்கள் கூறி இருக்கிறார்கள். இதில் ஒரு கதை நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு மிகவும் பிடித்து விட்டதாகவும் அதில் விஷாலும், கார்த்தியும் நடிப்பார்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இருவருக்கும் இந்த படத்தில் வழங்கப்படும் சம்பள தொகை நடிகர் சங்க கட்டிட நிதியில் சேர்க்கப்படும். அத்துடன் படம் திரைக்கு வந்த பிறகு லாபத்தில் ஒரு பங்கும் கிடைக்கும். இந்த படத்தின் மூலமாக மட்டும் நடிகர் சங்கத்துக்கு ரூ.25 கோடி வரை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் படப்பிடிப்பை இரண்டு மாதங்களில் முடித்து விட்டு இந்த வருடம் இறுதியில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர்.

ஜெயம் ரவி, ஆர்யா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் ஜனவரியில் தொடங்கும் என்று தெரிகிறது. நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் சங்கத்தின் தலைவர் நாசர் தலைமையில் வருகிற 10-ந் தேதி சென்னையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் நடிகர் சங்கத்துக்கான கட்டிடம் கட்டும் பணிகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. ஆகஸ்டு மாதம் கட்டுமான வேலைகளை தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.

Related Posts