தேசிய வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள 1,000 குடும்பங்களுக்கு தலா 5 இலட்சம் ரூபாய் செலவில் வீடுகள் அமைத்து கொடுக்கும் திட்டத்துக்கமைய, பயனாளிகளைத் தெரிவு செய்வதற்கான நடவடிக்கை பிரதேச செயலக ரீதியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இலங்கையில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துச் செல்கின்ற நிலையில் இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வு கேள்விக்குறியாகியுள்ளது. அதிகரித்த விவசாய இரசாயனப் பாவனையால் இந்த நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இவர்களின் வாழ்வாதரத்தை கருத்திற்கொண்டு, இவர்களுக்கு கைகொடுத்து உதவ முன்வந்துள்ள வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சு, தேசிய ரீதியில் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இந்த வேலைத்திட்டத்தில் நோயினால் பாதிக்கப்பட்ட, காணியுள்ளவர்கள் மாத்திரம் உள்வாங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.