மன உறுதி இருந்தால் புற்றுநோயை எளிதில் வெல்ல முடியும் என்பதற்கு நானே சாட்சி என நடிகை கெளதமி தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகை கௌதமி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்குப் பின்னர் அதிலிருந்து மீண்ட கௌதமி, மற்ற புற்றுநோயாளிகளுக்கு உதவுவதற்காக லைஃப் அகைன் என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.
இந்த நிறுவனம் மூலம் புற்றுநோயால் பாதிக்கபட்டுள்ள நோயாளிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.
சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகை கெளதமி,புத்தகத்தை வெளியிட்டு பேசினார்.புற்று நோயை வெல்ல முடியும் என்பதற்கு நானே ஒரு எடுத்துக்காட்டு.
புற்றுநோய் வந்ததும் எல்லாம் முடிந்து விட்டது என அர்த்தமல்ல.அதற்கு பின்னும் ஒரு வாழ்க்கை இருக்கிறது.தன்னம்பிக்கை,மன உறுதி,புற்று நோயை எதிர்த்து போராடும் மனவலிமை ஆகியவற்றை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிப்பதே என்னுடைய லைஃப் அகைன் நிறுவனத்தின் முக்கிய குறிக்கோளாக உள்ளது என்று கூறினார்.
இந்த விழாவில் கெளதமியின் லைஃப் அகைன் நிறுவனத்திற்கு ஒரு லட்ச ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டது.
புற்றுநோய் பாதிப்பினால் சினிமாவில் இருந்து நடிக்காமல் ஒதுங்கியிருந்த கௌதமி,நீண்ட நாட்களுக்குப் பின்னர் கமல்ஹாசனுடன் பாபநாசம் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.