Ad Widget

மத்திய வங்கியின் நம்பகத் தன்மையினை நிலைநிறுத்துதலே முதன்மையான பொறுப்பாகும்

மத்திய வங்கியின் நம்பகத் தன்மை மற்றும் நற்பெயரினை நிலைநிறுத்துவதனையே எனது முதன்மையான பொறுப்பாக கருதுகின்றேன் என மத்திய வங்கியின் புதிய ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்தார்.

indirajith-kumara-suwamy

இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, அதற்கான நியமனக் கடிதத்தினை நேற்று (04) காலை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ஜனாதிபதியிடமிருந்து பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து தனது கடமைகளை பொறுப்பேற்ற ஆளுநர் நேற்று(04) காலை மத்திய வங்கியிலிருந்து தனது ஆரம்ப உத்தியோகபூர்வ உரையினை ஆற்றினார். அவ் ஆரம்ப உரையிலையே அவர் இவ்வாறு தனது பொறுப்பு குறித்து தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “என்னால் முடிந்த அனைத்தினையும் அனைத்து நேரங்களிலும் மிகுந்த ஈடுபாட்டுடன் என்னால் செய்ய முடியும் என நான் உறுதியளிக்கிறேன்” என தெரிவித்தார். அத்துடன் மேலும் பல கருத்துக்களை முன்வைத்த அவர் இவ் உயர்ந்த பதவியை தனக்கு வழங்கிய தன்மீது நம்பிக்கை கொண்ட ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோருக்கு நான் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளளேன்.

எனக்கு இவ் நியமனத்தை வழங்கிய பின்னர் ஜனாதிபதியினால் எனக்கு சில வழிமுறைகள் வழங்கப்பட்டன. அவ்வகையில், “உங்களது அனைத்து வேலைகளையும் நேரான முறையில் செய்யவும், அத்துடன் உங்களது வேலையை குழப்பும் வகையில் செயற்படும் எவருக்கும் அச்சம் கொள்ள தேவையில்லை” எனவும் ஜனாதிபதி எனக்கு தெரிவித்தார். அவ்வகையில் ஜனாதிபதியின் விருப்பத்தினை நிறைவேற்றும் வகையில் எனது சேவைகளை ஒழுங்கான முறையில் முன்னெடுத்துச் செல்வதே எனது விருப்பமாகும்.

அத்துடன் பிரதமரின் எண்ணக்கரு குறித்து கருத்து பகிர்ந்து கொண்ட ஆளுநர், பாரிய பொருளாதார ஸ்திரத்தன்மையினையை பெற்றுக்கொள்வதற்காக அதற்கு தேவையான அனைத்து அடித்தளங்களையும் சிறப்பான முறையில் ஸ்தாபிப்பதே வழங்கப்படும் சேவையின் முதல் படியாகும். மிகவும் ஸ்திரம்வாய்ந்த பாரிய பொருளாதார அடிப்படைத் தளங்களை பெறுவதன் மூலம், நிதித்துறையில் சிறந்த தளத்தினை பேணமுடியும். இவைகளை நாட்டின் உயிர்நாடியாகும். அவ்வகையில் மத்திய வங்கியின் சகல பொறுப்புக்களையும் உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும். அதற்காக அனைவரினதும் கூட்டு ஒத்துழைப்பு, மிகவும் அவசியம் இவற்றின் பொறுப்புக்களை அனைவரும் உரிய முறையில் பேண வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன் மத்திய வங்கியானது எவ்வாறு செயற்பட வேண்டும், அதன் கலாசாரமானது எவ்வாறு தொழிலாற்ற வேண்டும் என்பது குறித்து மூன்று அடிப்படை கருத்துக்களை உங்கள் முன் வைக்கிறேன் என தெரிவித்த ஆளுநர், அவையாவன நேர்மை, தொழில்நுட்ப நேர்த்தி மற்றும் தொழில் சார் நேர்த்தி, இவற்றினை உரிய முறையில் பேணுவதன் மூலம் நாம் சிறந்த இலக்கினை அடைய முடியும் என தெரிவித்தார். அனைவரும் கலந்துரையாடுவதன் மூலம் சிறந்த தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள முடியும். அவ்வகையில் வாக்குவாதம், கலந்துரையாடல் என்பவற்றினை நான் வரவேற்கிறேன். தனிப்பட்ட ரீதியில் எவரும் கருத்துக்களை ஒருவருக்கொருவர் தெரிவிக்காமல் வெளிப்படையாக தெரிவிப்பதன் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

நாம் நமது வரலாற்றில் பின்னோக்கி பார்க்குமிடத்து குறிப்பாக 1948 ஆம் ஆண்டுகளில் அரசியல் தான் பொருளாதாரத்துக்கான ஒரு துருப்புச்சீட்டாக காணப்பட்டது. ஆனால் நல்ல பொருளாதாரமே நல்லதொரு அரசியல் என ஒவ்வொரு பொருளியலாளர்களுமே அரசியல்வாதிகளுக்கு புரிய வைக்க வேண்டும். இது பொருளியலாளர்கள் ஒவ்வொருவரினதும் கடமை. அவ்வகையில் நல்லதொரு பொருளாதார தரத்தினை உருவாக்க மத்திய வங்கி என்ற ரீதியில் நாமனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டும்.

மத்திய வங்கியானது சுதந்திரமாகவும், தொழில்நுட்ப ரீதியிலும், அரசுக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்குவதிலும் முனைப்புடன் செயற்படும். அத்துடன் மத்திய வங்கி என்ற ரீதியில் எமக்கான பொறுப்புக்களை எமது கொள்கைகளுக்கு ஏற்ப செயற்படுத்த முடியும் என்பதில் பூரண நம்பிக்கையுள்ளது என ஆளுநர் தெரிவித்ததுடன், அனைவரதும் ஒத்துழைப்பு மிக அவசியம் எனக்கூறி தனதுரையினை முடித்துக் கொண்டார்.

Related Posts