Ad Widget

யாழ்ப்பாணத்தில் பணியாளர்களை தாக்கி இலஞ்சம் பெற பொலிஸார் முயற்சி

யாழ்ப்பாணத்தில் விற்பனை நிலையமொன்றில், பொலிஸார் இலஞ்சம் பெற முற்பட்டதாக தெரிவித்து, யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலுள்ள விற்பனை நிலையமொன்றில் நேற்று அதிகாலை 12.30 அளவில் பொலிஸார் பணியாளர்களை தாக்கியதுடன், இலஞ்சம் பெற முற்பட்டுள்ளார்.

யாழ். நகரப் பகுதியிலுள்ள இரவு நேர விற்பனை நிலையமொன்றிலே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

விற்பனை நிலையமொன்றிற்கு சிவில் உடையில் சென்ற யாழ். பொலிஸ் நிலையத்தை சேர்ந்த இரு பொலிஸார், விற்பனை நிலைய பணியாளரிடம் தமக்கு இலஞ்சமாக சிகரெட் தருமாறு கேட்டுள்ளனர்.

இதற்கு குறித்த பணியாளர்கள் மறுப்பு தெரிவித்த நிலையில், பணியாளர்களுடன் பொலிஸார் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன், விற்பனை நிலைய பணியாளர்களுக்கு தாம் சென்ற மோட்டார் சைக்கிளின் தலைக்கவசத்தால் பலமாக தாக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பாக குறித்த விற்பனை நிலைய பணியாளர்கள், அதிகாலை 1 மணியளவில் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

மேலும், பொலிஸாருடைய தாக்குதல் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் இருப்பதாகவும், அவற்றைவிட விற்பனை நிலையத்தில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கமராக்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ். பொலிஸ் நிலைய பொலிஸார் சிலர், பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமங்களுக்கு சென்று அங்குள்ள சிறு விற்பனையாளர்கள் கைத்தொழிலாளர்களிடம் இலஞ்சம் பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். நகரிலுள்ள மதுபான விற்பனை நிலையமொன்றில் இலஞ்சமாக மது பெற்றுச்செல்கின்ற, வீடியோ காட்சிகளும் இணையத்தளங்களில் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts