Ad Widget

பங்களாதேஷ் தாக்குதல்: 20 பணயக்கைதிகள் கொல்லப்பட்டனர்

ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவால் உரிமை கோரப்பட்டுள்ள தாக்குதலில், பங்களாதேஷ் தலைநகர் டாக்காவிலுள்ள கபேயொன்றில், கொமாண்டோக்கள் உள் நுழைந்த பின்னர், 12 மணித்தியாலங்களின் பின்னர் முடிவுக்கு வந்த முற்றுகையில் 20, வெளிநாட்டு பணயக்கைதிகள் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

கொல்லப்பட்டவர்களில், பெரும்பாலோனோர், கூரிய ஆயுதங்களால் குத்தப்பட்டு இறந்திருந்ததாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெனரல் நயீம் அஷ்ஃபக் சௌத்திரி தெரிவித்துள்ளார்.

கொல்லப்பட்ட அனைவரும் வெளிநாட்டவர் எனத் தெரிவித்த இராணுவ அதிகாரிகள், கொல்லப்பட்டவர்களில் ஜப்பானியர்களும் இத்தாலியர்களும் அடங்குவதாக தெரிவித்துள்ளனர்.

ஹோலே அர்ட்டிசன் கபேயில் அதிகாலை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 13 பணயக்கைதிகள் மீட்கப்பட்டதாக பிரதமர் ஷேய்க் ஹசீனா தெரிவித்ததோடு, ஆறு துப்பாக்கிதாரிகளும் கொல்லப்பட்டதாகவும் ஒருவர் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார். மீட்பு நடவடிக்கையில் இரண்டு இலங்கையர்களும் காயமடைந்த ஜப்பானியர் ஒருவரும் மீட்கப்பட்டதாக லெப்டினன்ட் கேணல் டுஹின் மொஹம்மட் மசூட் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இறந்தவர்களில் இந்தியப் பெண் ஒருவரும் உள்ளடங்குவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். தனது பிரஜை ஒருவர் மீட்கப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ள ஜப்பான், ஏழு பேரின் நிலை என்னவென தெரியவில்லை என்று தெரிவித்துள்ளது.

இத்தாலியர்கள் கொல்லப்பட்டதை இத்தாலிய பிரதமர் மட்டையோ றென்சி உறுதிப்படுத்தியுள்ள நிலையில், 10 வரையான இத்தாலியர்களின் நிலை தெரியாதிருப்பதாக இத்தாலிய ஊடகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, கொல்லப்பட்ட 20 பேரும் வெளிநாட்டவர்கள் என இராணுவம் தெரிவித்தபோதும், குறைந்தது ஒரு பங்களாதேஷ் நாட்டவரும் கொல்லப்பட்ட பணயக்கைதிகளில் இருக்கலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

24 பேர் கொல்லப்பட்டதாக ஐ.எஸ்.ஐ.எஸ் தெரிவித்துள்ள நிலையில், இதை மறுத்துள்ள பங்களாதேஷ் பொலிஸார், இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் குறைந்தது 20 பேர் காயமடைந்ததாகவும் முன்னர் தெரிவித்திருந்தனர்.

நேற்றுக் காலையில், இந்து பூசாரி ஒருவர், டாக்காவுக்கு தென்மேற்காகவுள்ள ஜீஹின்னைடா மாவட்டத்திலுள்ள கோயிலொன்றில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டிருந்தார்.

Related Posts