ஐசிசி கிரிக்கெட் கமிட்டியின் ஊடகப் பிரதிநிதியாக உள்ள ரவிசாஸ்திரி அந்த பதவியை ராஜினாமா செய்து உள்ளார்.
இந்தியா கிரிக்கெட் அணியின் முன்னாள் இயக்குனர் ரவிசாஸ்திரி தனக்கு தலைமை பயிற்சியாளர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் பயிற்சியாளராக கும்ப்ளே நியமிக்கப்பட்டார். இதனால் விரக்தி அடைந்த ரவிசாஸ்திரி ஆலோசனை கமிட்டியில் உள்ள கங்குலி மீது கடும் அருப்தி தெரிவித்தார்.
மேலும், பயிற்சியாளர் நேர் காணலின்போது தன்னை சவுரவ் கங்குலி அவமரியாதை செய்துவிட்டதாகவும் குற்றம் சாட்டினார். கங்குலி தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் பொறுப்பான பதவியில் இருப்பவர் அந்த பதவிக்கு மதிப்பளிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். இதற்கு கங்குலியும் பதிலடியும் கொடுத்தார்.
இதற்கிடையே சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) கிரிக்கெட் கமிட்டியின் ஊடகப் பிரதிநிதி ரவிசாஸ்திரி ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நான் ஏற்கெனவே எனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி விட்டேன். நான் இந்தப் பதவியில் 6 ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். சொந்த வேலைகள் காரணமாக தற்போது விலக முடிவெடுத்தேன், என்றார்.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராகத் தன்னை தேர்ந்தெடுக்காதது அவரிடத்தில் ஆழமான ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், கங்குலியுடனான மோதல் உள்ளிட்ட காரணங்களால் அவர் இந்த பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.