சில அரச அலுவலர்களின் தன்னிச்சையான தன்னலம் கருதிய நடவடிக்கைகள் எமக்கு வருத்தத்தைத் தருகின்றது. எம்மக்களை உதாசீனஞ் செய்து மாற்றாருக்கு மனமகிழ்வை ஊட்டப் பாடுபடும் அவர்களின் மனோநிலை மாற வேண்டும். அவர்கள் ஒவ்வொருவரின் நடவடிக்கைகளையும் நாம் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றோம். என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வவுனியா சிதம்பரபுரம் குடியேற்ற கிராம மக்களுக்கான காணி அனுமதிப்பத்திரம் வழங்கும் வைபவமும் , தற்காலிக வீட்டுத்திட்டம் வழங்கும் வைபவமும் வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
அந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,
பலவருடப் போராட்டம் இன்று பயன் அளித்துள்ளது. எல்லைக் கிராம எம்மக்களின் ஏக்கங்கள் சில இன்று நீக்கங் கண்டுள்ளன. இந்நிலையையடையப் பாடுபட்ட அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.
1990ம் ஆண்டளவில் அப்போதைய ஜனாதிபதியாக இருந்த அதிமேதகு ரணசிங்க பிரேமதாச அவர்களின் வழிகாட்டலின் கீழ், அப்போது இலங்கையில் ஏற்பட்ட தற்காலிக சமாதானத்தின் போது, இந்தியாவிலிருந்த அகதிகளை அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலயம் இலங்கைக்கு மீண்டும் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டது.
அவ்வாறு கொண்டுவரப்பட்ட மக்களைக் குடியமர்த்துவதற்காக வவுனியாவில் ஆசிகுளம் கிராம சேவகர் பிரிவின் தெற்கு எல்லையிலுள்ள சிதம்பரபுரம் என்ற இக்கிராமத்தின் காடுகளைத் துப்பரவு செய்து தற்காலிக வாழ்விடங்களை அமைத்ததுடன் இந்தியாவிலிருந்து மீளத் திரும்பியவர்களை இங்கே தங்க வைத்தனர். இதில் வடக்குக் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களும் மலையகத்தைச் சேர்ந்தவர்களும் அடங்கியிருந்தனர்.
அவ்வேளையில் வவுனியாவில் தாண்டிக்குளம் வரையிலான பகுதி இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் இருந்து வந்தது. அதன் பின்னர் நாட்டின் அவ்வப்போது ஏற்பட்ட தற்காலிக சமாதான சூழ்நிலைகளின் போது இங்கிருந்து மக்கள் படிப்படியாக வேறு இடங்களுக்குக் குடியேற்றம் செய்யப்பட்டனர். எனினும் ஏறத்தாள 200 குடும்பங்கள் தொடர்ந்தும் இதேயிடத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி 25 வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்ட அதே தற்காலிக கொட்டகைகளில் தொடர்ந்தும் வாழ்ந்து வந்தனர்.
தங்களை நிரந்தரமாகக் குடியேற்றுமாறு பலவித போராட்டங்கள் ஊடாகக் கோரிக்கைகளை முன்வைத்த போதும் எதுவித பலனும் அவர்களுக்குக் கிட்டவில்லை.
இந்நிலையில் வடக்கு மாகாணசபை நிறுவப்பட்ட பின்னர் இம்மக்களின் பிரச்சனை தொடர்பாக வவுனியா மாவட்ட மாகாணசபை உறுப்பினரும் மாகாண சுகாதார அமைச்சருமாகிய டாக்டர் சத்தியலிங்கம் அவர்கள் உங்களது பிரச்சனையை எனது கவனத்திற்குக் கொண்டுவந்தார்.
அவருடன் இப்பிரதேசத்திற்கு நானும் விஜயம் செய்து உங்கள் அனைவரையும் நேரில் சந்தித்து உரையாடியதுடன் உங்கள் குறைகளையுங் கேட்டு அறிந்து கொண்டேன். உங்கள் நிலை பற்றி உரிய மத்திய அமைச்சுக்கும் அதிகாரிகளுக்கும் அறியத்தந்தோம். அதன் பயனாக மாகாணமும் மத்தியும் மனமுவந்து மனிதாபிமானத்துடன் செயல்ப்பட்டதால் தற்போது இங்கே கூடியிருக்குங் குடும்பங்கள் அனைவருக்குந் தலா 6 பேர்ச் காணி வழங்கப்பட்டு அதற்கான காணி அனுமதிப்பத்திரமும் இன்று இங்கே வழங்கி வைக்கப்படுகின்றன.
அத்துடன் வடக்கு மாகாண புனர்வாழ்வு அமைச்சினால் தற்காலிக வாழ்விடங்களை அமைப்பதற்கு ஒவ்வோர் குடும்பத்திற்கும் தலா 70000 ரூபா வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் உள்ளக மின்சார வழங்கலுக்கான வேலைத்திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று அறிகின்றேன்.
மின்சார வழங்கல் தொடர்பாக இன்னோர் விடயத்தையும் இச் சந்தர்ப்பத்தில் தெரிவிக்க விரும்புகின்றேன். வீட்டு மின் இணைப்பைப் பெற்றுக் கொள்வதற்கான கட்டணத்தை முழுமையாகச் செலுத்த முடியாதவர்களுக்கு உதவும் முகமாக எரிபொருள் மற்றும் மின்சக்தி வலுவூட்டல் அமைச்சு புதியதோர் திட்டத்தை இலகு தவணை அடிப்படையில் அறிமுகஞ் செய்திருக்கின்றது.
அதாவது வீட்டின் மின் இணைப்புக் கட்டணமாகச் செலுத்தப்பட வேண்டிய தொகையை மின்சாரத்தைப் பெற்ற பின்னர் 72 மாதங்களில் இலகு தவணை அடிப்படையில் செலுத்தக்கூடியதாகப் புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
அதே போன்று வீட்டு மின் இணைப்புக்களை முழுப்பணத்தையுஞ் செலுத்தி செய்விக்க முடியாதவர்களுக்கும் 14000 ரூபா கட்டணத்துடன் வீட்டு மின் இணைப்பு வேலைகளும் செய்து கொடுக்கப்பட்டு அத் தொகையும் இலகு தவணைக் கொடுப்பனவு முறையில் 72 மாதங்களில் கொடுக்கக்கூடியதான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எனவே வசதி குறைந்த மக்கள் இவ்வாறான இலகு தவணை முறையில் முற்பணம் எதுவுமின்றி மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ளக்கூடிய வசதிகள் உண்டு என்ற விடயத்தையும் இச் சந்தர்ப்பத்தில் தெரிவிக்க விரும்புகின்றேன்.
இக்கிராமம் புதிய கிராமம் என்பதால் இதற்குரிய அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க வேண்டிய தேவை உள்ளது. உள்ளக வீதிகள் அமைக்கப்பட வேண்டும். சிறுவர் பாடசாலைகள், குடிநீர் வசதி, நிரந்தர வீட்டுத் திட்டம் போன்ற முக்கிய விடயங்களில் நாம் கூடிய கவனஞ் செலுத்த வேண்டிய கடப்பாட்டில் உள்ளோம்.
வீட்டுத்திட்டம் தொடர்பாக மீள்குடியேற்ற அமைச்சர் கௌரவ டி.எம்.சுவாமிநாதன் அவர்கள் இங்கே கலந்து கொண்டு இங்கு குடியிருக்குங் குடும்பங்களின் நிலை பற்றி நேரடியாக அவதானித்திருப்பதால் இவர்களுக்கான நிரந்தர வீடுகளை அமைப்பதற்கான உதவிகளை முன்னுரிமை அடிப்படையில் வழங்கி உதவுவார்கள் என்று எண்ணுகின்றேன்.
கௌரவ சுவாமிநாதன் அவர்கள் எனது நீண்ட கால நண்பர். தேசிய விடயங்களிலுந் தமிழ் மக்கள் பிரச்சனைகளிலும் கல்லூரி காலந் தொட்டே சிரத்தை காட்டி வருபவர். நிறைந்த இறைபக்தி கொண்டவர். மீள்குடியேற்ற அமைச்சராக அவர் எமக்குக் கிடைத்தமை எமது அதிர்ஷ்டமே. அவரின் உதவிகள் அவர் பதவியில் இருக்கும் வரையில் எமக்குக் கிடைப்பன என்பதில் எனக்குச் சந்தேகம் எதுவுமில்லை.
இந்தப் பகுதியில் சுகாதார அமைச்சினால் தாய் சேய் மருத்துவச் சிகிச்சை நிலையம் ஒன்று அமைப்பதற்கான முயற்சிகளில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சு ஈடுபட்டுள்ளதாக அறிகின்றேன். வரவேற்கப்பட வேண்டிய விடயம் இது. அதேபோன்று ஏனைய அமைச்சுக்களும் தமது நிதி மூலங்களுக்கு ஏற்ப வழங்கக்கூடிய துரித சேவைகளை இங்குள்ள மக்களுக்கு வழங்கி உதவவேண்டும் என இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக் கொள்கின்றேன்.
தமிழர்களின் பூர்வீகக் கிராமமாக விளங்கக்கூடிய சிதம்பரபுரம் வவுனியா மாவட்டத்தின் தெற்கு எல்லையிலும், அனுராதபுர மாவட்டத்தின் வடக்கு எல்லைக்கு சற்று அப்பாலும் அமைந்திருக்கக்கூடிய ஒரு கிராமம். ஆகையால் இது புவியியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவத்தைப் பெறுகின்றது.
எமது நிலங்கள் பாதுகாக்கப்படுவதற்கு எல்லைப்புறக் கிராமங்களின் புனரமைப்புக்களும் விஸ்தரிப்புக்களும் அத்தியாவசியமானவை ஆவன. அதனை எமது அரச அலுவலர்கள் புரிந்து கொண்டு நடந்து கொள்ள வேண்டும். சில அரச அலுவலர்களின் தன்னிச்சையான தன்னலம் கருதிய நடவடிக்கைகள் எமக்கு வருத்தத்தைத் தருகின்றது.
எம்மக்களை உதாசீனஞ் செய்து மாற்றாருக்கு மனமகிழ்வை ஊட்டப் பாடுபடும் அவர்களின் மனோநிலை மாற வேண்டும். அவர்கள் ஒவ்வொருவரின் நடவடிக்கைகளையும் நாம் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றோம்.
இந்தியாவில் இருந்து தாயகம் திரும்ப 50000 குடும்பங்கள் தயார்.
இடம்பெயர்ந்த மக்களில் சுமார் 50000 குடும்பங்கள் வரையில் இந்தியாவிலிருந்து இலங்கைக்குத் திரும்புவதற்குத் தயாராக உள்ள போதிலும் அவர்களுக்கு எதுவித உதவியோ அல்லது ஒத்தாசைகளோ கிடைக்கப்பெறும் என்ற உத்தரவாதம் அற்ற நிலையில் மீண்டும் தமது வாழ்விடங்களுக்குத் திரும்பிவர அவர்கள் அச்சங் காட்டுகின்றார்கள்.
இந்தியாவிலிருந்து திரும்பிய சில குடும்பங்கள் தமக்கு எதுவித உதவியும் அரசாங்கத்திடம் இருந்தோ அல்லது அரசசார்பற்ற நிறுவனங்களிடம் இருந்தோ கிடைக்கப் பெறவில்லை என்று கூறுகின்றார்கள்.
அனுமதிப்பத்திரங்கள் வைத்திருக்கும் சிலர் தமது காணிகளைப்; பார்க்கச் சென்றால் பிற மாவட்டங்களில் வாழ்ந்த மக்கள் தெற்கிலிருந்து வந்து ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதைக் கண்டுள்ளார்கள். இராணுவம் அவர்களுக்குத் துணை போகின்றது என்று கூறுகின்றார்கள். தாங்கள் இந்தியாவிலிருந்த காலத்தில் அங்கு பிறந்து வளர்ந்த அவர்களின் பிள்ளைகள் போதிய கல்விகளைப் பெற்றிருந்தும் இங்கு வந்தவுடன் அரச உத்தியோகங்களுக்கு விண்ணப்பிப்பதில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றி எமக்கு எடுத்தியம்புகின்றார்கள்.
எனவே இந்தியாவில் இருந்து திரும்பும் குடும்பங்களின் புனர்வாழ்வு பற்றி முறையான திட்டங்கள் வகுக்கப்படவேண்டும். திரும்பி வரக்கூடிய குடும்பங்கள் இப்பகுதிகளில் குடியேறி சுயமாகத் தொழில் முயற்சிகளில் ஈடுபடும்வரை அவர்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட வேண்டும். இந்தியாவில் இருந்த காலத்தில் பிறந்த பிள்ளைகளுக்கான பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்களைப் பெற்றுக் கொடுத்தல், தேசிய அடையாள அட்டையைப் பெறுதல் மற்றும் அவர்களின் கல்வித்தர சான்றிதழ்களை இலங்கைக் கல்விச்சான்றிதழ்கள் அடிப்படையில் தகுதியுடையதாக்குதல் போன்ற அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதன் மூலம் அவர்களை மீளக் குடியேற்ற முடியும்.
நான் 2014ம் ஆண்டில் சென்னை சென்ற போது அங்கு வாழ் எம்மக்கள் முக்கியமாக எடுத்துக் கூறிய விடயந் தம் குழந்தைகளின் கல்வி பற்றியதே. அவர்கள் நாடு திரும்பினால் அவ்வாறான கல்வியைத் தம் பிள்ளைகள் பெறுவார்களோ என்ற அச்சம் அவர்களை வாட்டியது.
இங்குள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளுடன் பேசியதில் அங்கு கல்வி கற்பவர்கள் தமது பெற்றோர் இங்கு வந்தாலும் தொடர்ந்து அங்கு கல்வி கற்கலாம் என்ற உத்தரவாதத்தைத் தந்திருந்தார்கள். அதனை உங்களுக்கு இத்தருணத்தில் சொல்லி வைக்கின்றேன். எனவே இவ்விடயங்களில் இலங்கை அரசும் வடமாகாண சபையும் இணைந்த ஒரு வேலைத்திட்டத்தை விரைந்து ஆரம்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
வடமாகாணசபையுடன் கலந்தாலோசித்து முடிவுகளை எடுங்கள்.
அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கும் கௌரவ பிரதம மந்திரிக்கும் நாம் மேலும் மேலும் கூறி வருவது வடமாகாண வேலைத்திட்டங்கள், செயற்றிட்டங்கள், கொள்கைகள் பற்றி நடவடிக்கைகள் எடுக்கும் போது இறுதித் தீர்மானங்கள் எடுக்க முன்னர் எங்களுடன் அதாவது வடமாகாணசபையுடன் கலந்தாலோசித்து முடிவுகளை எடுங்கள்.
தான்தோன்றித்தனமாக முடிவுகளை எடுக்க விழையாதீர்கள். ஏன் பிரதம செயலாளருக்குத் தெரியப்படுத்தினோமே என்று கூறுவீர்கள். பிரதம செயலாளர் தொழிற் திறனுடனும், நிர்வாகத் திறனுடனும் நடக்கும் மத்தியால் நியமிக்கப்பட்ட ஒரு அலுவலர். அரசியல் ரீதியாக விடயங்களை ஆராய்வதென்றால் அவற்றை மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
பல செயற்றிட்டங்களின் தூரநோக்குப் பாதிப்புக்களை எம்மக்கள் பிரதிநிதிகளே அடையாளங் காணக்கூடியவர்கள் என மேலும் தெரிவித்தார்.