எல்லாம் திட்டமிட்டபடி சரியாக நடந்திருந்தால் இந்த வாரம் அதாவது ஜூலை 1 ஆம் தேதி கபாலி படம் ரிலீஸ் ஆகியிருக்கும். முஸ்லீம்களின் விரத காலமான ரமலான் மாதத்தில் அதாவது ஜூலை 1 ஆம் தேதி கபாலி படத்தை வெளியிட்டால் மலேஷியா மற்றும் வளைகுடா நாடுகளில் மக்கள் தியேட்டருக்கு வர மாட்டார்கள் என்று சொல்லப்பட்டதால் கபாலி ரிலீஸை தள்ளி வைத்தனர்.
கபாலி ஜூலை 1 ரிலீஸ் இல்லை என்று தெரிந்ததும், இந்த வாரம் 6 திரைப்படங்கள் ரிலீசாகவிருக்கின்றன. சமுத்திரகனி இயக்கி, தயாரித்து ஹீரோவாகவும் நடித்துள்ள ‘அப்பா’, பர்மா படத்தை இயக்கிய தரணிதரன் இயக்கத்தில் சிபிராஜ், நடித்துள்ள ‘ஜாக்சன் துரை’, ஏ.எம்.ஆர். ரமேஷ் இயக்கத்தில் அர்ஜுன், ஷாம், மனிஷா கொய்ராலா நடித்துள்ள ‘ஒரு மெல்லிய கோடு’, ராம்கோபால் வர்மா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வில்லாதி வில்லன் வீரப்பன்’, ‘தமிழன்’ படத்தை இயக்கிய அப்துல் மஜீத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பைசா’, விஜய் சண்முகவேல் அய்யனாரின் ‘ஒன்பதிலிருந்து பத்து வரை’ ஆகியவையே அந்த 6 படங்கள்!
சிபி ராஜ், நடித்துள்ள ‘ஜாக்சன் துரை’ ஹாரர் ரகம். சமுத்திரகனி இயக்கியுள்ள ‘அப்பா’ பிள்ளைகள் வளர்ப்பு குறித்து நல்ல ஒரு கருத்தை கூறும் படமாக அமைந்துள்ளது. ராம்கோபால் வர்மாவின் ‘வில்லாதி வில்லன் வீரப்பன்’ சந்தன கடத்தல் வீரப்பனை பற்றிய படம். ‘ஒரு மெல்லிய கோடு’ க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. அப்துல் மஜீத் இயக்கியுள்ள ‘பைசா’ குப்பை பொறுக்குகிறவர்கள் பற்றிய படம்.
‘ஒன்பதிலிருந்து பத்து வரை’ காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம். இப்படி வித்தியாசமான கதை அம்சங்களுடன் இந்த வாரம் வெள்ளிக் கிழமை அரை டஜன் படங்கள் ரிலீசாகின்றன. இந்த 6 படங்களில் என்னென்ன படங்கள் ரசிகர்களை கவர்ந்து வெற்றி படங்களாக அமையும் வரும் வெள்ளிக்கிழமையே தெரிந்துவிடும். என்றாலும் சமுத்திரக்கனியின் அப்பா படத்தை பத்திரிகையாளர்களுக்கு முன் கூட்டியே திரையிட்டனர். அப்பா படத்துக்கு மிகப்பெரிய பாராட்டு கிடைத்திருக்கிறது. காக்கா முட்டை போன்று இந்தப்படத்திற்கு விருது கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.