தமிழ்த் திரையுலகத்தில் மட்டுமல்லாமல் இந்தியத் திரையுலகத்தில் தற்போது வெளிவரும் படங்கள் அனைத்துமே ‘சினிமாஸ்கோப்’ என்ற அகன்ற திரை வடிவத்தில்தான் திரையிடப்பட்டு வருகின்றன. திரையில் படம் தெரியும் புலன் விகிதம் என்பது பொதுவாக ‘சினிமாஸ்கோப்’ என்றால் 1 : 2.35 என்ற அளவில் இருக்கும். அந்தக் காலத்தில் பெரும்பாலும் 1:1.33 என்ற விகிதத்தில்தான் எடுத்து வந்தனர். அதை நம் ரசிகர்களுக்கு 35எம்எம் என்று சொன்னால்தான் தெரியும். ஆனால், அந்த முறையில் தற்போது யாருமே படமெடுப்பதில்லை.
ஜுலை 1ம் தேதி வெளிவர உள்ள ‘அப்பா’ படத்தை சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடும் வகையில் இயக்குனர் சமுத்திரக்கனி 1:1.85 என்ற விகிதத்தில் திரையிட உள்ளார். தமிழ்நாடு முழுவதும் இந்த விதத்தில்தான் படம் திரையிடப்பட உள்ளது. டிஜிட்டல் யுகத்தில் இப்படி ஒரு வித்தியாசமான முயற்சியை திரையிடலில் கையாண்டது ஏன் என இயக்குனர் சமுத்திரக்கனியிடம் கேட்ட போது, “இந்த 1:1.85 விகிதம்தான் சர்வதேச தரமாக உள்ளது. உலகில் உள்ள பல பகுதிகளிலும் இப்படித்தான் திரையிடல் நடைபெறுகிறது. நமது விழியின் பார்வை புலன் அந்த விகிதத்திற்கு மட்டுமே கட்டுப்பட்டது. அதை மீறிய விகிதம் கண்பார்வைக்கு புலப்படாமல் போகும். படத்தைப் பார்க்கும் போது திரையில் ஈடுபாடு அதிகம் இருக்க வேண்டும். படம் பார்ப்பவர்கள் திரையின் வேறு பகுதிகளுக்கு பார்வையை நகர்த்த முடியாமல் படத்தையே உன்னிப்பாகக் கவனிக்க முடியும்,” என்றார்.
படத்தைப் பார்த்தவர்களும் படம் சர்வதேசத் தரத்தில் இருப்பதோடு, பெற்றோர்களும் பிள்ளைகளும் பார்க்க வேண்டிய படம் என்று பாராட்டுகிறார்கள்.