நேற்று முன் தினம் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டத்தில் தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அப்புறப்படுத்தமை ஒரு எச்சரிக்கை நடவடிக்கையாக கணிப்பிடப்பட்டுள்ளது.
வழமை போன்றே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா மற்றும் சரவணபவன், சிறீதரன் போன்றோர் தமது சொகுசு வாகனங்களில் வந்திறங்கி கைகளில் எடுத்து வந்த பேனர்களை பிடித்தவாறு மக்கள் போராட்டத்தினை வழிநடத்த முற்பட்டனர்.
நல்லூர் முன்றலில் தேங்காய் உடைத்து போராட்டத்தில் கலந்து கொள்ள முற்பட்ட அவர்களை வலி வடக்கு மக்கள் கேள்விகளால் விரட்டியடித்தனர். நீங்கள் நல்லிணக்கத்துடன் அரசுடன் இருக்கிறீர்கள். பிறந்த நாள் கொண்டாடுகின்றீர்கள். பிறகு எதற்கு மக்களை ஏமாற்றி போராட்டத்திற்கு வருகின்றீர்கள் என பின்னியெடுத்திருந்தனர்.
இதே வேளை சகல தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேற வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலமே அரசு எமது நிலையை புரிந்து கொள்ளுமென அவர்கள் கோரினர். மக்களது அதிரடியால் சிறீதரன் சத்தமின்றி வெளியேறி விட ஏனைய இருவரும் நல்லூர் ஆலய மரத்தில் தனித்து நிற்க ஊர்வலம் புறப்பட்டு சென்றிருந்தது.
அண்மையில் தனது மகளது பிறந்த தினத்தை ஜனாதிபதியை அழைத்து வந்து நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் கொண்டாடியமை மக்களிடையே கடும் சீற்றத்தை தோற்றுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனிடையே இச்சம்பவத்தை தமிழ் ஊடகங்கள் திட்டமிட்டு மறைப்பு செய்துவிட்டதாகவும் வலி.வடக்கு மக்கள் குற்றச்சாட்டுக்களினை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.