சட்ட விரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்லத் திட்மிட்டிருந்த 09 இலங்கையர்கள், தமிழ்நாடு, திருச்செந்தூர் தூத்துக்குடியில் இன்று செவ்வாய்க்கிழமை (28) கைதுசெய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுற்றுலா விசாவில் தமிழ்நாடு வந்துள்ள இந்த இலங்கையர்கள், அவுஸ்திரேலியா செல்ல முடியுமென நம்பவைக்கப்பட்டுள்ளனர் என ஓர் உயர் பொலிஸ் அதிகாரி, இந்திய ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
இவர்களை, திருச்செந்தூரில் உள்ள ஒரு விடுதியில் வைத்து கியூ பிரிவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
எனினும், இவர்கள் எவ்வாறு அவுஸ்திரேலியா செல்லவிருந்தனர் என்பது உட்பட விரிவான தகவல்களைத் தர அவர்கள் மறுத்திவிட்டனர்.
தமிழ்நாடு அகதி முகாம்களில் வாழும் பலர், ஆட்கடத்தல்காரர்களினால் அவுத்திரேலியா செல்ல முடியுமென நம்பவைக்கப்படுகின்றனர்.
அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல விடும்பும் இலங்கையர்கள் பல்வேறு இடங்களிலிருந்து புறப்பட முயற்சிக்கின்றனர். இவர்களில் ஒரு பிரிவினர் அங்கு போய் சேரினும் அவுஸ்திரேலியா இவர்களை உடனே திருப்பி அனுப்பி விடுகின்றது.
அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக வருவோரை அனுமதிக்கப்போவதில்லை என அந்நாட்டு அரசாங்கம் பல வகைகளிலும் அறிவுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.